Close
பிப்ரவரி 22, 2025 10:33 மணி

நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசனக் கருவிகள்

பேளுக்குறிச்சி கிராமத்தில் அரசு மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்து, மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய தோட்டத்தை கலெக்டர் உமா பார்வையிட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசனக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், நுண்ணீர் பாசனம் மற்றும் விதை கிராமங்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் அவர் கூறியதாவது: பாசன நீரை திறம்பட பயன்படுத்துவதை வலியுறுத்துவதற்காக, நுண்ணீர் பாசனம் அமைப்பதை ஊக்குவிக்கவும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி 5 ஹெக்டேர் வரை நிதி உதவி பெற முடியும். ஏற்கனவே பயனடைந்த விவசாயிகள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுப்பித்து மானியத்தையும் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு சுமார் 709 ஹெக்டேர் பரப்பளவிற்கு ரூ. 3 கோடியே 57 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் நுண்ணீர் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், விதை கிராம திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் 3,695 விவசாயிகளுக்கு பல்வேறு வகையான நெல் ரகங்கள் 71,598 கிலோ வழங்கப்பட்டுள்ளன என கூறினார்.
முன்னதாக, பேளுக்குறிச்சியைச் சேர்ந்த விவசாயி காளியண்ணன், விதை கிராம திட்டத்தின் கீழ் 20 கிலோ விதை நெல்லை மானியமாக பெற்று நெற்பயிர் சாகுப்படி செய்துள்ளதையும், விவசாயி செல்வராஜ் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் 1 ஹெக்டர் பரப்பளவில் ரூ. 1.05 லட்சம் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து மஞ்சள் சாகுபடி செய்துள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top