நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், பள்ளி மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார்.
வளரும் இளம் தலைமுறையினை போதையில் இருந்து பாதுகாக்க வேண்டியது நமது கடமை என நாமக்கல் ஆட்சியர் உமா பேசினார். அவர் மேலும் கூறுகையில்,
நாமக்கல் மாவட்டத்தை, போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஒருவர் போதை பொருளை பயன்படுத்துவதால், சுய சிந்தனையின்றி பல்வேறு குற்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றார்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் நடவடிக்கைகளை நாம் கண்காணிக்க வேண்டும். மாதா, பிதா, குரு என்ற உயர்நிலையில், ஆசிரியர்கள் உள்ளனர். ஆசிரியர்களாகிய நீங்கள் தான், மாணவ, மாணவியருக்கு தாய், தந்தையாக இருந்து நல்வழிப்படுத்த வேண்டும்.
இது தனிநபர் சார்ந்த பிரச்சனை இல்லை. சங்கிலி தொடர் போல பல்வேறு நிலைகளில் சமுதாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும். இதனால் ஆண், பெண் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது.
தற்போது ஆன்லைனில் கூட போதைப் பொருட்கள் எளிதில் கிடைத்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவது என்பது ஒரு யுத்தம் போன்றது. இந்த யுத்தத்தில் நாம் வெற்றி பெற்று வளரும் இளம் தலைமுறையினரை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
தகவல் தொழில் நுட்பம் நிறைந்த இன்றைய காலத்தில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகின்றார்கள். இதுபோன்ற விசயங்களுக்கு அடிமையாகாமல், குழந்தைகளை சுய தொழில் முனைவோர்களாக ஊக்குவிக்க வேண்டும். பாதுகாப்பான சூழ்நிலையை நம் குழந்தைகளுக்கு நாம் உருவாக்கித் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணியாற்றி பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள், 6 பேருக்கு கருணை அடிப்படையில் அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆர்டிஓ பார்த்தீபன், கூடுதல் எஸ்.பி.,க்கள் சண்முகம், தனராசு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.