நாமக்கல் உழவர் சந்தை சார்பில் பழையபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நாமக்கல் உழவர் சந்தை சார்பில், வேளாண் துணை இயக்குனர் நாசர் அறிவுரைப்படி, எருமப்பட்டி ஒன்றியம், பழையபாளையம் கிராமத்தில், விவசாயி கிருஷ்ணமூர்த்தி தோட்டத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர் தலைமை வகித்து, உழவர் சந்தையின் புதிய நடைமுறைகள், அடையாள அட்டை புதுப்பித்து வழங்குதல், அதற்கான ஆவணங்கள் குறித்து விளக்கினார்.
எருமப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜவேல், மானிய திட்டங்கள் குறித்து பேசினார். உதவி வேளாண் அலுவலர் கோகுல், உழவர் சந்தையில் விலை நிர்ணயம் செய்யும் முறை, புதிய அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் இணைக்க வேண்டிய ஆவணங்கள் பற்றி விளக்கி கூறினார்.
மேலும், விலை நிர்ணயம் செய்வதற்கு, வெளி விற்பனை விலை மற்றும் சில்லரை விலை சேகரித்தல், விவசாயிகள் பதிவு செய்வது குறித்தும், கடை ஒதுக்கீடு செய்தல், வயல் ஆய்வு, இலவச தராசு, இலவச பஸ் வசதி உள்ளிட்ட தகவல்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
வேளாண்துறை அலுவலர்கள் மற்றும் திரளான விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.