மாநில வானவில் மன்ற அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பெற்ற வெங்கமேடு அரசு பள்ளி மாணவருக்கு, நாமக்கல் ஆட்சியர் உமா பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களை மாணவர்கள் தாங்களே பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக, தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், 2022ம் ஆண்டில் வானவில் மன்றம் நடமாடும் அறிவியல் ஆய்வகம் தொடங்கப்பட்டது.
வானவில் மன்றச் செயல்பாடுகளுக்காக ரூ. 11.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாநில, தென்னிந்திய அளவில் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியில் நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் வசந்த் கலந்துகொண்டு, கழிவுநீர் மேலாண்மை திட்டத்தில், இயற்கை முறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வது குறித்த செயல்திட்டத்தை காட்சிப்படுத்தினார்.
இந்த மாடல் மாநில அளவில் 8ம் இடம் பிடித்துது. அந்த மாணவர் அரசு சார்பில் வெளிநாடு செல்ல தேர்வாகியுள்ளார்கள்.
இதையொட்டி நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு மாணவர் வசந்த்தை வரவழைத்து, அவருக்கு மாவட்ட ஆட்சியர் உமா பாராட்டு தெரிவித்தார்.