கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, எருமப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்காக 1வது வார்டு, சிங்களங்கோம்பை ஏரி அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு சிங்களங்கோம்பை சுற்றுவட்டார மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் எருமப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களிடம் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது எருமப்பட்டி பேரூராட்சிக்கு முறையான சாக்கடை வசதி கிடையாது. இச்சூழலில் ரூ.7.47 கோடி மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் சிங்களங்கோம்பை ஏரி அருகே இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் நிலத்தடி நீர் மற்றும் விவசாயமும் பாதிக்கும். எனவே இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றனர்.
அவர்களை சமரசம் செய்த அதிகாரிகள் உரிய நடவடிக்க எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.