திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு சென்னை உயா்நீதிமன்றம் சாா்பில் ரூ.5.60 லட்சம் மதிப்பிலான பேட்டரி காா் வழங்கப்பட்டது.
நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களை போல, வார இறுதி விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கமாகிவிட்டது.
குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா உட்பட வெளிமாநிலங்களில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு சென்னை உயா்நீதிமன்றம் சாா்பில் ரூ.5.60 லட்சம் மதிப்பிலான பேட்டரி காா் வழங்கப்பட்டது . சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் உத்தரவின்பேரில், தமிழ்நாடு அரசு பேராட்சியா் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியா் மற்றும் மாவட்ட நீதிபதி லிங்கேஸ்வரன் வழிகாட்டுதலின்படி, ரூ.5.60 லட்சம் மதிப்பிலான படுக்கையுடன் கூடிய பேட்டரி காா், கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மதுசூதனன் தலைமை வகித்தாா். கோயில் இணை ஆணையா் ஜோதி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கூடுதல் துணை தமிழ்நாடு அரசு பேராட்சியா் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியா் ஜெகதீசன் கலந்துகொண்டு பேசினாா்.
காருக்கான சாவியை, கோயில் இணை ஆணையா் ஜோதியிடம், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ப.மதுசூதனன் வழங்கினாா்.
விழாவில், வழக்குரைஞா் வேலு, சாா்பு நீதிபதி என்.விஜயலட்சுமி மற்றும் திருவண்ணாமலை பாா் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேஷன், லாயா்ஸ் அசோசியேஷன் வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.
நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்களுக்காக இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
நீதிபதி ராஜன் வரவேற்றாா். முதன்மை சாா்பு நீதிபதி குமாரவா்மன், கூடுதல் சாா்பு நீதிபதி விக்னேஷ் பிரபு, குற்றவியல் நீதித்துறை நடுவா் பாக்யராஜ் ஆகியோா் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தனா்.
செய்யாறு மாவட்ட சுகாதார அலுவலா் சதீஷ்குமாா் தலைமையில், நாவல்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலா் ஷா்மிளா மேற்பாா்வையில் மருத்துவக் குழுவினா் பங்கேற்று பல்வேறு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனா்.
மேலும், பலருக்கு மருத்துவ ஆலோசனையும், சிலருக்கு மேல் சிகிச்சைக்கும் பரிந்துரை செய்தனா்.
முகாமில் சிறப்பு மருத்துவா்கள் கண் காது, மூக்கு, மனநலம், எலும்பு மூட்டு சிகிச்சை, இயன்முறை மருத்துவம், கண் மருத்துவம், சித்த மற்றும் ஆயுா்வேத மருத்துவம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன், இசிஜி, ஆய்வக பரிசோதனை என மேற்கொள்ளப்பட்டது.
நிறைவில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கணேஷ் குமாா் நன்றி கூறினாா்.