திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த ஆதமங்கலம்புதூா் கிராமத்தில் புதிய காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அண்ணாதுரை எம்.பி. கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டது. அப்போதுதான் காவலர்களுக்கு ஆணையம் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவல்துறை மானிய கோரிக்கையில் முதல்வர் ஸ்டாலினிடம் ஆதமங்கலம் புதூரில் புதியதாக காவல் நிலையம் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அவர் கைப்பட ஆதமங்கலம் புதூரில் புதிய காவல் நிலையம் தொடங்கப்படும் என எழுதி உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் அப்போது 2 காவல் நிலையங்கள் தான் புதிதாக தொடங்கப்பட்டது. அதில் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதியில் ஆதமங்கலம் புதூரில் தொடங்கப்பட்டது.
இந்த காவல் நிலையத்தின் கீழ், ஆதமங்கலம்புதூா், சிறுவள்ளூா், எள்ளுபாறை, சேங்கபுத்தேரி, அய்யம்பாளையம், கேட்டவரம்பாளையம், சாலைமேடு, ஓமூடி, கட்டவரம், கிடாம்பாளையம், தொப்பனந்தல், நேருநகா், அய்யப்பநகா், ஆதம்பாளையம், வெங்கிட்டம்பாளையம், கெங்கவரம், நவாப்பாளையம், நல்லான்பிள்ளைபெற்றான், காந்தபாளையம், சீனந்தல், தேவராயன்பாளையம், வேளானந்தல், பெருமாபாளையம், வடகரைநம்மியந்தல், வீரளூா், கூற்றம்பள்ளி, மேல்சோழங்குப்பம், சீராம்பாளையம் என 16 தாய் கிராமங்களும், 17 சேய் கிராமங்கள் என 7 கி.மீ.சுற்றளவுள்ள 31 கிராமங்கள் வருகின்றன. ஆதமங்கலம்புதூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 சட்டம்- ஒழுங்கு காவல் நிலையங்கள், 7 மகளிா் காவல் நிலையங்கள், ஒரு குற்றப் பிரிவு காவல் நிலையம், 3 போக்குவரத்து காவல் நிலையங்கள், 4 மதுவிலக்கு மற்றும் அமலாக்கத் துறை காவல் நிலையங்கள் என மொத்தம் 55 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் கலசபாக்கம் எம்எல்ஏ சரவணன் அதிக கோரிக்கை மனுக்களை வழங்குவது வழக்கம். முதல்வர் மு.க.ஸ்டாலின் கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் தொகுதியில் 20 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, என அமைச்சர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் தனிப் பிரிவு ஆய்வாளா் தயாளன், ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா் ராஜராஜேஸ்வரி, ஒன்றிய திமுக செயலாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணியன், அண்ணாமலை, ராமஜெயம், ஆரஞ்சி ஆறுமுகம், மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.