Close
மார்ச் 1, 2025 11:23 காலை

மேயர், துணை மேயர் வார்டு வாரியாக மக்கள் குறைகளை கேட்க வேண்டும்: மாநகராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்

மேயர், துணை மேயர் வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் குறைகளை கேட்க வேண்டும் என நாமக்கல் மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாமக்கல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் லாநிதி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
சத்தியவதி (1வது வார்டு கவுன்சிலர்): வார்டுக்கு உட்பட்ட பாலாஜி நகர், எஸ்பிகே நகர் ஆகியவற்றில் மின் விளக்கு வசதியில்லை. தொடர்ந்து 3 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது என்றார்.

நத்தக்குமார் (9வது வார்டு): மாநகராட்சி அலுவலகம் முன் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம் நிலவி வருகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தினாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், எனது வார்டில் மின் விளக்கு வசதி இல்லை. மேயர், துணை மேயர் ஆகியோர் வார்டு வாரியாக ஆய்வு நடத்தி மக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கிருஷ்ணமூர்த்தி (5வது வார்டு): வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை, மாலை வேளைகளில் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றுவதால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அனைத்து வார்டுகளிலும் இந்தப் பிரச்சினை உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இளம்பரிதி (34வது வார்டு): மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்படாமல் 109 போர்வெல் கிணறுகள் உள்ளன. இவற்றுக்கு மாதந்தோறும் மாநகராட்சி மூலம் மின் கட்டணம் செலுத்தப்படுவதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதற்கான மின் இணைப்பை துண்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் பலர் வார்டில் தெரு மின் விளக்கு வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளைக் கேட்டுப் பேசினார்கள்.

இவற்றின் மீது உரிய நடடிக்கை எடுப்பதாக மேயர், துணை மேயர் மற்றும் கமிஷனர் ஆகியோர் உறுதியளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top