Close
பிப்ரவரி 28, 2025 8:56 மணி

பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் மோதலால் உயிரிழப்பு சம்பவங்கள்: பெற்றோர்கள் அதிர்ச்சி…!

நாமக்கல் மாவட்டத்தில் மேலை நாடுகளைப் போல், ஒரே ஆண்டில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதலால், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெற்றோர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் பள்ளி மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டும், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி ஏற்படும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை, பள்ளி மாணவர்கள் மிகவும் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்டு பள்ளியிலும் சமூகத்திலும் கன்னியமாக வாழ்ந்து வந்தனர்.

சமீபத்தில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களால் தவறு செய்யும் மாணவர்களை, ஆசிரியர்கள் கம்பால் அடித்து திருத்துவது தடைபட்டுள்ளது. இதனால் மிகச்சிறிய வயதிலேயே மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்வதும், சட்டம் ஒழுங்கை மீறி செயல்படுவதும் பரவி வருகிறது.

முன்பெல்லாம் ஒரு மாணவர் தவறு செய்தால், ஆசிரியர் அவனை அடித்து புத்திமதி கூறி திருத்துவார். ஆசிரியர் அடித்ததாக மாணவர் தனது குடும்பத்தினரிடம் கூறினால், மாணவரது பெற்றோர்கள் மீண்டும் மாணவரை கண்டித்து அடித்து திருத்தும் வழக்கம் இருந்தது.

தற்போது தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால்கூட, மாணவரின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர் அடுத்த நாள் காளையில் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களைக் கண்டிக்கும் பழக்கம் வந்துவிட்டது.

இதனால் ஆசிரியர்கள் மாணவர்களை அடித்து கண்டிக்கும் பழக்கத்தை கைவிட்டு விட்டனர். இதனால் சிறிய வயது முதலே மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளத் துவங்கிவிட்டனர். ஆசிரியர்கள் கையில்  குச்சி இருந்தால் மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் முன்னேறுவார்கள் என்றிருந்த காலம் தற்போது இல்லை. அவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் பல இடங்களில் கட்டுப்பாட்டை மீறிய செயல்கள் நடைபெற்று வருகின்றன.

அண்மைக்காலமாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களிடையே நடைபெறும் மோதல் பெற்றோரையும், ஆசிரியர்களையும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. பள்ளி மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதை விட, செல்போன், சினிமா, போதைப்பொருட்கள் போன்றவை அவர்களை திசை திருப்பி வருகின்றன. அதுமட்டுமின்றி, ஜாதி ரீதியிலான நடவடிக்கைகளும் மாணவர்களின் மோதலுக்கு காரணமாகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அரசுப் பள்ளியில் 2 மாணவர்களும், தனியார் பள்ளியில் ஒரு மாணவரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். எருமப்பட்டி அருகே வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், நவலடிப்பட்டியைச் சேர்ந்த பிளஸ் 1 படித்து வந்த மாணவர், 2024 ஆக. 23-ஆம் தேதி தனது செருப்பு காணாமல் போனது தொடர்பாக சக மாணவரிடம் கேட்க, அவர்களிடையே ஏற்பட்ட மோதலில் அவர் மர்மமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோகனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.

கடந்த ஜனவரி 7-ஆம் தேதி நாமக்கல், ரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கரூரைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஹாஸ்டல் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டபோதும், அவரது உயிரிழப்பில் சர்ச்சை ஏற்பட்டதால், மாணவர் உயிரிழந்தபோது, ஹாஸ்டல் மாடியில் இருந்த மாணவர்கள் சிலரை காவதுறையினர் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இது மாணவர் உயிரிழப்பில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது, ராசிபுரம் சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவந்த 14 வயது மாணவர் ஒருவர் பள்ளி இடைவேளை நேரத்தில், பள்ளி கழிப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது சம்மந்தாக விசாரணை செய்த காவல்துறையினர், அதே பள்ளியில் படித்த சக மாணவர் ஒருவரை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்துள்ளனர்.

நல்ல முறையில் கல்வி பயின்று, வேலைக்குச் சென்று பெற்றோரையும், சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய மாணவர்கள், பொறுமையின்மை, கோபம், தவறான வழிகாட்டுதல் போன்ற பாதையில் சென்று நண்பர்களையும், உடன் பயில்வோரையும் கொலை செய்யும் அளவிற்கு சென்று, சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.

மேலை நாடுகளில் இருந்த இந்த கலாச்சாரம் தற்போது நமது உள்ளூர் பள்ளி மாணவர்களிடையே பரவி அவர்களுக்குள் ஏற்படும் மோதல் பெற்றோரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களிடையே மோதலை அகற்றி, ஒற்றுமையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top