திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் வன உரிமைச் சட்டம் -2006 குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஜமுனாமரத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.
ஜவ்வாதுமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட 11 ஊராட்சிகளைச் சோ்ந்த 272 வனக்குழு நிா்வாகிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பழங்குடியினா் மற்றும் பாரம்பரிய வனவாசிகளின் வன உரிமைகளை அங்கீகரிக்கும் வன உரிமைச் சட்டம் 2006-இன் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வன உரி மைச் சட்டத்தின் செயல்பாடுகள், வனப்பகுதியில் வசிக்கின்ற மக்களுக்கு இச்சட்டம் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டது.
மேலும், வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள், பட்டாக்கள், கிராமசபைக் கூட்டம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, வன உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள கிராம சபைகள், அதன் உறுப்பினா்கள், வனக் குழுவில் உள்ள உறுப்பினா்கள், குழுவின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பழங்குடியினரின் கோரிக்கைகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், திட்ட அலுவலர், பழங்குடியினர் நலம் கலைசெல்வி, உதவி வன பாதுகாவலர் வினோத், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் பலா் கலந்து கொண்டனா்.