நாமக்கல்லில் சித்தா டாக்டரிடம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த 7 பேரை காவல்துறையினர்கைது செய்தனர்.
திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையத்தில் வசிப்பவர் ரத்தினம் (31). இவர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சித்தா மருத்துவராக டாக்டராக பணியாற்றி வருகிறார்.
அவர் கடந்த 26-ந் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு சித்தர் மலைக்கு செல்வதற்காக நாமக்கல் வந்தார். மோகனூர் ரோட்டில், பழைய அரசு மருத்துவமனை முன்பு பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க நபரிடம் லிப்ட் கேட்டுள்ளார். அவரின் வண்டியின் பின்புறம் உட்கார்ந்து சென்றார். அவர் கொங்குநகர் அருகே ரெயில்வே பாதைக்கு ரத்தினத்தை அழைத்துச் சென்றார்.
அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த மர்ம நபர்கள் சிலர் ரத்தினத்தை கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி செல்போனை பிடுங்கி உள்ளனர். பின்னர் அவரது ஜி.பே கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்தை அவர்களது வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொண்டனர்.
மேலும், ரத்தினம் கையில் அணிந்து இருந்த இரண்டரை பவுன் எடையுள்ள தங்க காப்பைப் பறித்துக் கொண்டு, வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இது குறித்து ரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சித்தா டாக்டரிடம்நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். நாமக்கல் காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையிலான காவல்துறையினர், நாமக்கல் – மோகனூர் ரோட்டில் வகுரம்பட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தினார்கள். ஆனால் அவர்கள் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றனர். எனவே அவர்களை ஜீப்பில் துரத்திப்பிடித்தனர்.
காவல்துறையினர் துரத்துவதை அறிந்த அவர்கள் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அங்கு தவறி விழுந்த இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
இதில் கணுக்காலில் காயம் அடைந்தவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களில் ஒருவர் பட்டறைமேடு கார்த்திகேயன் (22) என்பதும் மற்றொருவர் தில்லைபுரம் காமராஜர் நகரை சேர்ந்த புருஷோத்தமன் (24) என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சித்தா மருத்துவரை தாக்கி பணம், நகை பறித்த வழக்கில் மேலும், என்.கொசவம்பட்டி அருண் (22), சிவநாயக்கன்பட்டி சஞ்சய் (21), மதுரை கீழையூரை சேர்ந்த மதுர கார்த்திக் என்கிற கார்த்திகேயன் (21), திருமலைப்பட்டியை சேர்ந்த சஞ்சய் (19), என்.கொசவம்பட்டி அருண்குமார் (24) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கார்த்திக் உள்ளிட்ட 7 பேரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த திருட்டுபோன தங்க காப்பை மீட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் ரிமாண்ட் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.