வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் மொத்தம் 26 விவசாயிகளுக்கு ரூ.110.62 இலட்சம் மதிப்பீட்டில் மானிய விலையிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், வழங்கினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை) மற்றும் மாங்குடி (காரைக்குடி) ஆகியோர் முன்னிலையில், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வழங்கி தெரிவிக்கையில்,
கருணாநிதி ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு விவசாயிகளின் நலன் காக்கப்பட்டு வந்தது. அச்சமயம் கடந்த 2006 ஆம் ஆண்டுகளில் கருணாநிதி அவர்களால் சுமார் 7,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அத்திட்டம் ஒன்றிய அரசிற்கும் மாதிரியாக திகழப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.
அவ்வழியில் விவசாய பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் விவசாய தொழிலினை மேலை நாடுகளுக்கு இணையான நவீன தொழில்நுட்பங்களுடன் விவசாயிகளுக்கான எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி விவசாயிகளின் உற்ற தோழனாக திகழ்ந்து வருகிறார்.
இதுபோன்று, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை (ம) மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை போன்ற துறைகள் வாயிலாகவும் பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலும் மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், விவசாய பெருங்குடி மக்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு, மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவெடுத்துள்ளது.
குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டு முதல் 2024-25 ஆம் ஆண்டு வரை வேளாண் பொறியியல் துறையின் சார்பில், வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத்திட்டத்தின் கீழ் 508 எண்ணிக்கையிலான தனிப்பட்ட விவசாயிகளுக்கு டிராக்டர், பவர்டில்லர், பவர்வீடர், ரொட்டவேட்டர் போன்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ரூ.558.445 இலட்சம் மதிப்பீட்டில் மானிய விலையிலும் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, 20 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு, 20% கூடுதல் மானியமாக ரூ.20,76,778/- மதிப்பீட்டிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 42 எண்ணிக்கையிலான கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ரூ.336.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதில், 30 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடதக்கதாகும்.
13 எண்ணிக்கையிலான கரும்பு சாகுபடிகேற்ற வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ரூ.557.20 இலட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. இ-வாடகை திட்டத்தின் கீழ், வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களான டிராக்டர் (ரொட்டவேட்டர் போன்ற கருவிகளுடன்) 1 மணி நேரத்திற்கு ரூ.500/- வாடகையாகவும், டோசர் 1 மணி நேரத்திற்க்கு ரூ.1230/- வாடகையாகவும், ஜேசிபி 1 மணி நேரத்திற்க்கு ரூ.890/- வாடகையாகவும், நெல் அறுவடை இயந்திரம் (சக்கரவகை) 1 மணி நேரத்திற்க்கு ரூ.1,160/- வாடகையாகவும் அரசு நிர்ணயித்த குறைந்த வாடகையில், 2,967 விவசாயிகள் பெற்று பயனடைந்துள்ளனர்.
முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.275.62 இலட்சம் மதிப்பீட்டில் சோலார் பம்ப்புகள் அமைக்கப்பட்டு, 155 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 95 எண்ணிக்கையிலான தரிசு நில தொகுப்புகளுக்கு சோலார் அல்லது மின் இணைப்புடன் கூடிய ஆழ்குழாய் கிணறு வாயிலாக நீர் ஆதாரத்தினை உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.837.78 இலட்சம் மதிப்பீட்டில் 1654 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
அதேபோன்று, 110 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ரூ.565.54 இலட்சம் மதிப்பீட்டில் புஞ்சை நிலங்களில் நீர் ஆதாரத்திற்காக சோலார் அல்லது மின் இணைப்புடன் கூடிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, பயன்பெற்று வருகின்றனர். மேலும், 129 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.156.00 இலட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டைகளும் அமைக்கப்பட்டும், 74 விவசாயிகளுக்கு ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மோட்டார்களும் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றையதினம் இந்நிகழ்ச்சியின் வாயிலாக வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டம் 2024-25ன் கீழ் 8 விவசாயிகளுக்கு டிராக்டர்கள் மொத்தம் ரூ.73,87,544/- மதிப்பீட்டில் ரூ.36,70,000/- மானிய தொகையுடனும், 12 விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் மொத்தம் ரூ.27,22,980/- மதிப்பீட்டில் ரூ.13,84,189/- மானிய தொகையுடனும், 5 விவசாயிகளுக்கு பவர்வீடர்கள் மொத்தம் ரூ. 5,96,700/- மதிப்பீட்டில் ரூ.3,48,132/- மானிய தொகையுடனும், 1 விவசாயிக்கு நெல் நடவு இயந்திரம் ரூ.3,54,900/- மதிப்பீட்டில் ரூ.2,12,940/- மானிய தொகையிலும் என ஆக மொத்தம் 26 விவசாயிகளுக்கு ரூ.1,10,62,124/- மதிப்பீட்டில் ரூ.56,15,261/- மானிய தொகையுடனும்,வழங்கப்பட்டுள்ளது. இதில், சிறு குறு, ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் மற்றும் இதர பிரிவினருக்கு 40 சதவீதம் மானியத்திலும் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்று விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நலத்திட்டங்களை விவசாயிகள் முழுமையாக அறிந்து கொண்டு அத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவதற்கென துறை சார்ந்த அலுவலர்களை முறையாக அணுகி, பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் சாந்தி சகாய சீலி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய பெருங்குடிமக்கள் பலர் கலந்து கொண்டனர்.