Close
மார்ச் 17, 2025 11:19 மணி

இந்தி படித்தவர்களுக்கும் தமிழ்நாடு தான் வேலை கொடுத்து காப்பாற்றி வருகிறது: அமைச்சர் வேலு

நல உதவிகள் வழங்கிய அமைச்சர் வேலு

வடநாட்டில் இந்தி படித்தவர்களுக்கும் வேலை இல்லை. தமிழ்நாடு தான் அவர்களையும் வேலை கொடுத்து காப்பாற்றி வருகிறது பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு உரையாற்றினார்.

திருவண்ணாமலை, வேட்டவலம் சாலை, திருவள்ளுவர் சிலை அருகில், திருவண்ணாமலை நகர திமுக சார்பில், கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் தலைமை வகித்தார். மாநகர மேயர் நிர்மலா வேல்மாறன், துணைமேயர் ராஜாங்கம், நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் சண்முகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, 2000க்கும் மேற்பட்டோருக்கு நல உதவிகள் வழங்கி பொதுப்பணித்துறை அமைச்சரும், கழக உயர்நிலைசெயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர் பேசுகையில்;

கொரோனா என்ற உலகத்தையே அச்சுறுத்திய, பல ஆயிரம் உயிர்களை பலிகொண்ட அந்த நோய் உச்சத்திலேயே இருந்தபோதுதான், நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தோம். கொரோனா நோய் தொற்றிக்கு மருத்துவப் பணியாளர்கள் அரும்பாடுபட்டனர்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கோவைக்குச் சென்ற நமது தமிழ்நாடு முதலமைச்சர், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். முதல்வர் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று, யாரும் செய்யத்துணியாத, ஒரு நடவடிக்கையாக முக கவசம் அணிந்து கொண்டு, கொரோனோ நோய்த்தொற்றால் காரணமாகத்தான், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனோ நோய்தொற்று விரட்டியடிக்கப்பட்டது.

இந்த திருவண்ணாமலையில் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுர குடிநீர், முக கவசங்கள், கிருமி நாசினிகளை பொதுமக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் வருடக் கணக்கில் வழங்கினோம். கொரோனோ தொற்றுக் காலத்தில் பணியாற்றிய முன்களப்பணியாளர்களுக்கு வருடம் முழுவதும் நம் இயக்கத்தின் சார்பாக உணவு வழங்கினோம் என்பதை பொதுமக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

விவசாயபெருங்குடி மக்கள், அன்றாட கூலி வேலை செய்யும் பாட்டாளி மக்கள் இவர்களின் பள்ளிக்குச்செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு என்பது ஒரு எட்டாக்கனியாகவே இருந்துவந்தது. இந்த வாட்டத்தை நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளத்தோடு, காலை உணவுத் திட்டம் கொண்டு வந்து அவர்களி ன் பசிப்பிணியைப் போக்கினார்.

பொறியியல் மற்றும் மருத்துவப்படிப்புகளை ஆங்கிலத்தில் படித்தால்தான் ஜெர்மன், கனடா , மலேசிலேயா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் சென்று பணிபுரியமுடியும்.  திருவண்ணாமலை கிராமப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஆங்கில மொழிகளில் படித்ததன் காரணமாகத்தான் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். ஆங்கிலம் என்பது நம் நாட்டிற்கான இணைப்பு மொழி என்று தான்பேரறிஞர் அண்ணா இரு மொழிகொள்கையை கொண்டு வந்தார். அதைத்தான் தலைவர் கலைஞரும், முதல்வர் .ஸ்டாலினும் பின்பற்றி வருகிறார்கள்,

மத்திய அரசு  தமிழ்நாட்டிற்கு நியாயமாக தரவேண்டிய நிதியை தரமறுக்கிறது. இந்தியைப் படித்தால்தான், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான கல்வி நிதியை விடுவிப்போம் என்று சர்வாதிகாரமாக இந்த  மத்திய அரசு கூறிவருகிறது.

நாம் இவர்களின் பணத்தைக் கேட்கவில்லை, தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணத்தை திரும்ப கேட்கிறோம். இந்தி படித்தவர்களுக்கு வடநாட்டிலேயே வேலைவாய்ப்பு இல்லை. ஆங்கில மொழி படிக்காமல் இந்திமட்டுமே படித்திட்ட வடநாட்டு மக்கள் என்னசெய்கிறார்கள் தெரியுமா? தமிழ்நாட்டில் பெயிண்டராக, மேஸ்திரி, சித்தாளாக, மருத்துவமனை பணியாளராகத்தான், கூலி வேலை செய்பவர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

ஆக வடநாட்டில் இந்திப் படித்தவர்களுக்கும் வேலை இல்லை. தமிழ்நாடுதான் அவர்களையும் வேலை கொடுத்து காப்பாற்றி வருகிறது என அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, கழக மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன்,சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி,சரவணன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர்கள் பிரியா விஜயரங்கன்,மாவட்ட அமைப்பாளர்கள் டி.வி. எம்.நேரு, காலேஜ் கு.ரவி, ஏ.ஏ.ஆறுமுகம்,ஒன்றிய செயலாளர்கள் ,கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top