திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் ஏற்பட்ட தீ விபத்தால், அரிய மூலிகைகள் எரிந்து சேதமடைந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலைத்தொடர் பகுதியில் 205 மலை கிராமங்கள் உள்ளன. ஜவ்வாது மலை அமைந்துள்ள பகுதி மிக நீண்ட கிழக்கு தொடர்ச்சி வனப்பகுதி ஆகும்.
இந்த கிழக்கு தொடர்ச்சி வனப்பகுதியில் யானை, கரடி, மான், காட்டெருமை மற்றும் அரிய வகை பாம்புகள் , அரிய வகை பறவைகள் அதிகளவில் உயிர்வாழ்ந்து வருகின்றன. மேலும் அங்கு அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் உள்ளன.
இந்த நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த பல குழுக்கள், கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த தீ விபத்தால் மூலிகைகள், புதர்கள் மற்றும் மரங்கள் எரிந்து, சில பறவைகள் மற்றும் விலங்குகள் இறந்தன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
மேலும் அங்கு, தமிழ்நாட்டில் மட்டுமே கிடைக்கக் கூடிய அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் உள்ளன. அதன்படி, இந்த இடம் பச்சிலை மருத்துவத்திற்கு பெயர் பெற்றது. இந்த மலையில் கிடைக்கும் மூலிகைகளை வைத்து, பல அரிய வகை நோய்களை கூட குணப்படுத்தும் பச்சிலை வைத்தியர்களை அந்த பகுதியில் காணலாம். அத்தகைய மூலிகைகள் தான் தற்போது ஏற்பட்ட தீ விபத்தால் எரிந்து நாசமாகியுள்ளன.
ஜவ்வாது மலைக்கு மேல் பீமன் நீர்வீழ்ச்சி, அம்ரிதி நீர்வீழ்ச்சி, ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி என சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்ற இடங்களும் உள்ளன. ஏரியில் படகு சவாரி, ட்ரெக்கிங், கேம்பிங், பாரா கிளைடிங் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும், செண்பகாதோப்பு அணை, மிருகண்டா நதி அணை போன்றவை அழகிய பாய்ண்ட்களை கொண்டுள்ளன. மேலும் பல சிறப்புகள் கொண்ட ஜவ்வாது மலையை வனத்துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்