Close
ஏப்ரல் 9, 2025 4:34 மணி

முட்டை கேட்ட மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சமையலர் உதவியாளர் கைது

திருவண்ணாமலை, போளூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் சத்துணவு முட்டை கேட்ட மாணவரை பணியாளர்கள் இருவர் துடைப்பத்தால் அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சமையலர், உதவியாளர் இருவரை இடைநீக்கம் செய்தும், 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டும் கல்வித் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செங்குணம் கொல்லைமேடு கிராமத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த 43 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர், உதவி ஆசிரியர் 2 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளி சத்துணவு சமையலராக அதே ஊரை சேர்ந்த லட்சுமி, உதவியாளராக முனியம்மாள் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு வரும் முட்டைகளை வேகவைத்து மாணவர்களுக்கு சரியாக வழங்காமல், முட்டைகளை மறைத்து வைத்துக்கொண்டு முட்டை தீர்ந்து விட்டது என்று பல நாட்களாக சொல்லி வந்துள்ளனர்.

இந்நிலையில், அனைத்து மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை மதியம் சத்துணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது, உணவுடன் முட்டை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, 5 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் சமையலறைக்குச் சென்று பார்த்துள்ளார்.

அப்போது, அங்கு முட்டை இருப்பது தெரியவந்துள்ளது. முட்டைகளை சமையல் கூடத்தில் வைத்துக் கொண்டே ஏன் இல்லை என்று கூறுகிறீர்கள் என்று அந்த மாணவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சத்துணவு ஊழியர்கள் எங்களையே கேள்வி கேட்குறாயா என்று ஒருமையில் பேசி மாணவர்களை துடைப்பத்தால் தாக்கினர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இச்சம்பவத்தை கண்டித்து சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாள் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும் இருவரையும் கைது செய்யக்கோரி ஊர் பொதுமக்கள் போராட்டம் செய்தனர். இதையடுத்து சமையலர் லட்சுமி, உதவியாளர் முனியம்மாள் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பள்ளியின் ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில், ‘குழந்தைகளின் பசிப்பிணி போக்கிட காலை உணவுத்திட்டம் கொண்டு வந்த முதல்வரின் திராவிட மாடல் அரசு குழந்தைகளுக்கு எதிரான எந்த வன்முறையையும் சகித்துக் கொள்ளாது’ என்று கூறியுள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top