திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் முதல் கீழ்தாமரைப்பாக்கம் கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூ 15.5 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலத்தை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் செந்தில், கண்காணிப்பு பொறியாளர் பரந்தாமன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் உள்ள தென்மாதிமங்கலம் முதல் கீழ் தாமரைப்பாக்கம் கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூ 15.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் 2022 முதல் 2023 ஆம் ஆண்டு நபார்டு வங்கி கடன் உதவி திட்டத்தின் கீழ் ஆர்.ஐ.டி.எப்-28ன் இந்த உயர்மட்ட பாலத்திற்கு அரசாணை பெறப்பட்டது.
கீழ் தாமரைப்பாக்கம் முதல் தென்மகாதேவ மங்கலம் கிராமங்களை இணைக்கும் செய்யாற்றின் குறுக்கே ரூ 15.5 கோடி மதிப்பீட்டில் உயிர் மட்ட பாலம் கட்டுவதற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான் பணிகளை தொடங்கி வைப்பதற்காக வந்துள்ளேன். அதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இப்போது அது பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது.
செய்யாற்றின் இரு கரையையும் இணைத்து கட்டப்படும் காலமானது மக்களுடைய வாழ்வாதாரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. காரணம் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து வரும்பொழுது ஆற்றை கடக்க இப்பகுதி மக்கள் முடியாமல் சுமார் 30க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரம் சென்று தான் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல முடிகிறது.
அதனால் செய்யாற்றின் உயர் மட்ட பாலம் வேண்டும் என்று கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல வகையான கட்டுமானங்கள் இருந்தாலும் பாலம் காட்டுவது என்பது ஒரு முக்கிய அங்கமாகும்.
காரணம் மக்கள் சாலை போக்குவரத்தின் மூலம் உரிய நேரத்தில் குறைந்த தூர பயணத்தில் வேகமாக இணைப்பை பெறுவதற்கு கட்டப்படும் கட்டுமானங்களில் ஒன்றாக பாலம் திகழ்கிறது.
அதிகம் மேம்பாலம் உயர் மட்ட பாலம் பெற்ற ஒரே எம்எல்ஏ அமைச்சர் பாராட்டு
கலசபாக்கம் தொகுதிக்காக நெடுஞ்சாலை துறை மூலம் எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் சாலைகளும் பெற்றுக் கொடுத்துள்ள சரவணன் எம்எல்ஏ நெடுஞ்சாலை துறை மூலம் ரூ 99 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் மேம்பாலங்கள் பெற்றுக் கொடுத்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் நெடுஞ்சாலை துறை மூலம் அதிகமான மேம்பாலமும் உயர் மட்ட பாலமும் பெற்ற ஒரே சட்டமன்ற உறுப்பினர் யார் என்றால் சரவணன் எம்எல்ஏ தான்.
அதேபோல் பொதுப்பணித்துறை மூலம் ரூ 14.52 கோடி மதிப்பீட்டில் 33 பணிகளை பெற்று கலசபாக்கத்தை வளர்ச்சியான தொகுதிக்காக கொண்டு செல்வது சரவணன் எம்எல்ஏ தான். அதேபோல் உங்களிடம் யாராவது சட்டமன்ற உறுப்பினர் என்ன செய்தார் என்று கேட்டால் செய்யாற்றின் குறுக்கே கட்டியுள்ள உயர்மட்ட பாலத்தை காட்டுங்கள்.
கலசபாக்கம் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி பணிகளை காட்டி இத்தனை வளர்ச்சி பணிகளும் திராவிட மாடல் ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தான் பெற்றுக் கொடுத்துள்ளார் என்று கூறுங்கள் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், கோட்ட பொறியாளர்கள், உதவி கோட்ட பொறியாளர்கள், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.