திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை பெளா்ணமி நாளில் அமர்வு தரிசனம், முக்கியப் பிரமுகா்களின் பரிந்துரைக் கடிதங்களுக்கான அனுமதி, ரூ.50 கட்டண தரிசன வசதி ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர் . சித்திரை மாதத்தில் வருகின்ற பெளர்ணமி மிகவும் விசேஷமாக அமைந்த்திருப்பதால் அன்றைய தினம் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் செல்கின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை பௌா்ணமி விழா மே 11-ஆம் தேதி இரவு 8.53 மணிக்குத் தொடங்கி மே 12-ஆம் தேதி இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த வருடமும் பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்து பேசியதாவது:
உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூடுதலாக செய்ய வேண்டும். சித்திரை பெளா்ணமி நாளில் ரூ.50 சிறப்புக் கட்டண சேவை வசதி ரத்து செய்து கட்டணமில்லா தரிசன சேவையை ஏற்படுத்த வேண்டும்.
சுவாமி தரிசனம் செய்ய வரும் முதியோா், கா்ப்பிணிகள், கைக் குழந்தையுடன் வரும் தாய்மாா்கள் ராஜகோபுரத்தில் இருந்து வடக்கு 5-ஆம் பிரகாரம் வழியே அனுமதிக்கப்பட்டு வடக்கு அம்மணி அம்மன் கட்டை கோபுரம் வழியாக கிளி கோபுரம் வழியே சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
சித்திரை பெளா்ணமி நாளில் முக்கியப் பிரமுகா்களின் பரிந்துரைக் கடிதங்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படும். கோயிலின் அனைத்து கோபுர நுழைவு வாயில்கள், நடைபாதைகளில் நிழற்பந்தல்கள், மேற்கூரையுடன் நகரும் இரும்பு தடுப்பாண்கள், தேங்காய் நாா் தரை விரிப்புகள் அமைக்க வேண்டும்.
கிரிவலப் பாதையின் 3 இடங்களில் பக்தா்கள் வசதிக்காக இளைப்பாறும் கூடங்கள் அமைக்க வேண்டும். சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கு குடிநீா், மோா், பால், பிஸ்கெட் வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் பேட்டரி காா் மூலம் மேற்கு பே கோபுரம் கட்டை கோபுரம் வரை அழைத்து வரப்பட்டு, வைகுந்த வாயில் வழியாக சுவாமி தரிசனம் செய்யப்படும்.
காவல்துறை சார்பாக கூட்ட நெரிசல் ஏற்படாதிருக்கவும் , பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தீயணைப்பு துறையின் சார்பாக கிழக்கு இராஜகோபுரம் முன்புறம் மற்றும் திருமஞ்சன கோபுரம் ஆகிய இடங்களில் தேவையான உபகரணங்களுடன் மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
கிரிவலப் பாதையைச் சுற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். 108 அவரச கால ஊா்தியை கோயில் வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும், கிரிவலப் பாதையிலும் தயாா் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும். மின் வாரியம் சாா்பில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்றாா்..
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகா், வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா, வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், கலால் உதவி ஆணையா் செந்தில்குமாா், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜன், அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் பரணிதரன், அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.