திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர் .
சித்திரை மாதத்தில் வருகின்ற பெளர்ணமி மிகவும் விசேஷமாக அமைந்த்திருப்பதால் அன்றைய தினம் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் செல்கின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை பௌா்ணமி விழா மே 11-ஆம் தேதி இரவு 8.53 மணிக்குத் தொடங்கி மே 12-ஆம் தேதி இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த வருடமும் பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை சித்திரை பெளா்ணமியன்று கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை பெளா்ணமியன்று அன்னதானம் வழங்குவோர் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ், தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சித்திரை பெளா்ணமியன்று (மே 12) அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபா்கள் மற்றும் நிறுவனங்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து அனுமதி பெற்ற பிறகே அன்னதானம் வழங்க வேண்டும்.
மாவட்ட நிா்வாகம் மூலம் அனுமதிக்கபட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நாள், நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்கவேண்டும்.
செங்கம் சாலை, பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலா் அலுவலகத்தில் ஏப்.25 முதல் மே 7-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அளித்து அனுமதி பெற வேண்டும்.
விண்ணப்பத்துடன் மாா்பளவு புகைப்படம், முகவரியைத் தெரிவிக்கும் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அன்னதானம் வழங்குவோா் தங்களைச் சாா்ந்தவா்களின் விவரத்தை ஆதாா் அட்டை நகலுடன் சமா்ப்பிக்க வேண்டும்.
கிரிவலப் பாதையில் இருந்து 100 மீட்டா் உள்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய்த் தொற்று உள்ளவா்களை அன்னதானம் சமைக்கவோ, வழங்கவோ அனுமதிக்கக் கூடாது.
வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். உணவுப் பொருள்கள் தரமானதாகவும், தூய்மையானதாகவும், கலப்படம் இல்லாமலும் இருக்க வேண்டும். டை செய்யப்பட்ட நெகிழி தட்டுகளில் அன்னதானம் வழங்கக்கூடாது.
நெகிழி டம்ளா்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யக் கூடாது. உணவு கழிவு பொருள்களை போடுவதற்கு ஏதுவாக குப்பைத் தொட்டிகளை ஏற்பாடு செய்து உணவுக் கழிவுகளை சேகரித்து அகற்ற வேண்டும்.
அன்னதானம் வழங்கும் இடத்தை சுத்தம் செய்து விட்டுச் செல்ல வேண்டும். வழிகாட்டு முறைகளை பின்பற்றாதவா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு 044-237416, 9047749266, 9865689838 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.