மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழாவுக்கு கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு கொடியேற்றம் வைபவத்தில், மதுரை மேயர் இந்திராணி, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை நகர் காவல் ஆணையாளர் டாக்டர் லோகநாதன், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் மற்றும் கோயில் இணையர் கிருஷ்ணன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.
காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் சுவாமி சன்னதி முன் கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவிழா நாட்களில் தினமும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை வீதி உலா வருகிறார்கள். மே 6 முதல் முக்கிய நிகழ்வாக அம்மன் பட்டாபிஷேகம் இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் நடக்கிறது. மே 7 திக்குவிஜயத்தை தொடர்ந்து மே 8 காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. மே 9 மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மே 11 கள்ளழகர் எதிர்சேவை, மே 12ல் ஆற்றில் சுவாமி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.