மதுரை சித்திரைப் பெருவிழா-2025 முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் , தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாவது:
மதுரை சித்திரைப் பெருவிழா-2025க்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் ஆகியவை முக்கிய நிகழ்வுகளாக திகழ்கின்றன.
இப்பெருவிழாவில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்பார்கள். அதன்படி போதிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எந்த அளவிற்கு சிறப்பாக மேற்கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பாக செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஏற்கனவே பல கூட்டங்கள் நடைபெற்ற பிறகும் கடந்த ஆண்டுகளில் மேற்கொண்ட முன்னேற்பாடு பணிகளை விட இந்தாண்டு கூடுதல் கவனத்துடன் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் பாலம் வேலை நடைபெற்று வருகின்றது. அதற்கு ஏற்ப கூடுதல் கவனம் செலுத்தி திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும். கோயிலுக்குள் பாஸ் நடைமுறை படுத்தப்படும், மற்ற இடங்களில் கடந்த வருடங்களில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் மாற்றியமைக்க வேண்டிய முன்னேற்பாடு பணிகளை இவ்வருடம் சிறப்பாக செய்யவே இந்த ஆய்வுக்கூட்டம் நடத்தினோம்.
பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறை வசதி போன்றவற்றில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்திட வேண்டும். தூய்மை காவலர் குழுக்கள் அமைத்து உடனுக்குடன் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாபெரும் இப்பெருவிழாவில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். மேலும் சித்திரைப் பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு தேவைக்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேம்படுத்தப்படும். என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது:
கடந்த வருடம் போன்று இந்த வருடமும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறும். குறிப்பாக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் வரும் வழிகளில் உள்ள மண்டகப்படிகளில் கள்ளழகர் குறித்த நேரத்தில் வருவதையும், புறப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் பல ஊர்களிலிருந்து வருகைபுரியும் பக்தர்கள் அதிக அளவில் கூடுவதற்கு வாய்புள்ளதால் பல்வேறு இடங்களில் கோயில் நிர்வாகம் சார்பாக பெரிய எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட வேண்டும். பக்தர்கள் வந்து செல்லும் வழிகளில் தடுப்புகள் உறுதியானதாக அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.