திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் வானாபுரம் ஊராட்சியில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 765 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 28 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மனுநீதி நாள் திட்ட முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். விழாவில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசுகையில்,
தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் மனுநீதி நாள் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டுமென்பதே இந்த முகாமின் நோக்கமாகும்.
பெண்கள் உயா்கல்வி பயில வேண்டும் என்ற அடிப்படையில் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் உயா்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்களுக்கு சிறு வயதில் திருமணங்கள் செய்து வைத்தால் அவர்கள் உடல்நலன் மற்றும் உயர்கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் அவர்களது பொருளாதாரமும் பாதிப்படையும். பெற்றோர்கள் அனைவரும் பெண்கள் உயர்கல்வி பயில ஒத்துழைப்பு அளித்து அரசு சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.
நலத்திட்ட உதவிகள்
முன்னதாக விழாவில் ஆட்சியா் 98 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணை, 18 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கான ஆணை, 56 பயனாளிகளுக்கு நத்தம் சிட்டா நகல்கள்,
229 பேருக்கு எஸ்.டி. இருளா் சான்றிதழ், 14 பேருக்கு சிறு, குறு விவசாயி சான்றிதழ், 6 பேருக்கு வாரிசு சான்றிதழ், 2 பேருக்கு இதர சான்றிதழ்,
14 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் உதவித்தொகையாக ரூ.3 லட்சத்து 7 ஆயிரத்து 500, திருமண உதவித்தொகையாக 12 பயனாளிகளுக்கு ரூ.ஒரு லட்சத்து 6 ஆயிரம், தற்காலிக இயலாமை உதவித்தொகையாக 10 பேருக்கு ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம்,
ரூ.8 லட்சத்து 29 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் 79 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்,
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பாக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 36 ஆயிரத்தில் 53 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, ரூ.3 லட்சத்து 48 ஆயிரத்தில் 29 மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை,
2 பயனாளிகளுக்கு ரூ.69 ஆயிரத்து 396 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள், ரூ.11 லட்சத்து 50 ஆயிரத்தில் 20 பேருக்கு கடனுதவிக்கான ஆணை,
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 39 ஆயிரத்து 534 மதிப்பீட்டில் உதவித்தொகை, ரூ.98 ஆயிரத்து 806 மதிப்பீட்டில் 10 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் மற்றும் கருவிகள்,
ஒருவருக்கு ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் ரூ.6 ஆயிரத்து 840 மதிப்பில் நலத்திட்ட உதவி என 765 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 28 லட்சத்து 11 ஆயிரத்து 578 மதிப்பீட்டில் பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் தப்பகராஜ் வழங்கினாா்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா், இணை இயக்குநா் (வேளாண்மை) கண்ணகி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சிவா, திட்ட அலுவலா் (பழங்குடியினா் நலன்) கலைச்செல்வி, உதவி இயக்குநா் (நில அளவை மற்றும் பதிவேடுகள்) சண்முகம், உதவி ஆணையா் (கலால்) செந்தில் குமாா், மாவட்ட மேலாளா் (தாட்கோ) ஏழுமலை, வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.