திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், தலைமையில் திருவண்ணாமலை மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் மே தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தலின்படி, மாவட்டம் முழுவதும் தேர்தல் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2025 மே 01 அன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் தொழில்துறை பகுதிகள் மற்றும் தொழிலாளர் குடியிருப்புகளில் வாக்காளர் விழிப்புணர்வு கூட்டங்கள் அல்லது பிரச்சாரங்கள், தேர்தல் கல்வியறிவின் ஒரு பகுதியாக, தொழில்துறை ஊழியர் குழுவில் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் செயல்படுத்தப்படலாம் மேலும் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாக்களிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் போட்டிகள், தொழிற்சங்கங்கள் அல்லது தொழிலாளர் சங்கங்களுடன் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்வுகள் வாயிலாக பொது மக்களிடையே 100 சதவீதம் வாக்களித்தல், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில் திருவண்ணாமலை மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டியும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வாக்காளர் கையேடுகள் மற்றும் துண்டுபிரசுரங்களை வழங்கி, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேர்தல்கள் குமரன், தேர்தல் மற்றும் திருவண்ணாமலை வட்டாட்சியர் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.