திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டம், வரகூர் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பாக டிஜிட்டல் பயிர் அளவீடு செய்யும் பணி நடை பெறுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்தியா முழுவதும் வேளாண் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் பணிகளை ஒருங்கிணைக்கவும், நிலத்தின் தன்மை, பயிர் அளவு, பயிர் வகைகள், கடன் காப்பீடு உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்துடன் நிலங்களை டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் வேளாண் நிலம், பயிர் குறித்து அனைத்து விவரங்களையும் டிஜிட்டல் முறையில் பயிர் அளவீடு செய்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சர்வே பணியில் பல ஆண்டு பயிர்கள், சில மாதங்களில் சாகுபடி செய்யும்பயிர்கள் என பிரித்து பதிவேற்றம்செய்யப்படுகிறது. இது பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை விரைவாக கணக்கீடு செய்ய ஏதுவாக அமையும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக தற்போது கோடை பயிர் சாகுபடி விபரங்களை டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 1061 வருவாய் கிராமங்களில் மொத்தம் 1885464 உட்பிரிவுகளில் கோடைப்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி பயிர் விவரங்களை இ அடங்கல் செயலியில் பதிவு செய்ய டிஜிட்டல் கிராப் சர்வே வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி உறுப்பினர்கள் மற்றும்வேளாண்மை கல்லூரி மாணவ மாணவியர்கள் ஆகியோர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பயிர் சாகுபடி விவரங்களை 28.04.2025 முதல் அரசின் வலைதளத்தில் பதிவு செய்யும் பணி அனைத்து வட்டாரங்களிலும் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை 377088 உட்பிரிவுகளில் பதிவேற்றம் முடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தண்டராம்பட்டு வட்டம், வரகூர் ஊராட்சியில் டிஜிட்டல் முறையில் பயிர் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அளவீடு செய்யும் பணியின் விவரம் குறித்தும், செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் குறித்து கேட்டறிந்து அளவீடு செய்யும்பணியினை ஆய்வு மேற்கொண்டார்.
இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன், இணை இயக்குநர் வேளாண்மை கண்ணகி, உதவி இயக்குநர் நில அளவை மற்றும் பதிவேடுகள் சண்முகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை மலர்மிழி, வட்டாட்சியர், மற்றும் அரசு துறைச்சார்ந்த அதுவலர்கள் கலந்து கொண்டனர்.