இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 9 இடங்களில் பயங்கரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது .
தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வரும் நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் நினைவுச் சின்னங்கள் மற்றும் முக்கிய வர்த்தக இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீர் பஞ்சாப் எல்லையோர விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும், அனுமதி பெற்று விமானங்களை இயக்கவும் ஒரு சில விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் தமிழக காவல்துறை சார்பாக விமான நிலைய வெளி வளாக பகுதியில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வழக்கமாக பத்து காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது மேலும் கூடுதலாக பத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை விமான நிலையத்திற்குள் வரக்கூடிய வாகனங்கள் விமான நிலைய நுழைவு வாயிலேயே நிறுத்தப்பட்டு காவல்துறையினர் தீவிர சோதனைக்குப் பிறகு விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பயண சீட்டு வைத்திருக்கும் பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
மதுரை விமான நிலையத்தில், மத்திய திறவு பாதுகாப்பு படை விமான நிலைய அலுவலகம் வெளிவளாகம் ஓடுபாதை உள்ளிட்ட மூன்று இடங்களிலும் தமிழக போலீசார் செக்போஸ்ட் மற்றும் வெளிவராக பகுதிகளில் கூடுதல் கண்காணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர் .
இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை விமான நிலையத்திற்கு நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.