Close
மே 12, 2025 10:48 மணி

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் இரண்டு பக்தர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வினை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

இந்நிலையில், அதிகாலை 3 மணி முதலாக கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதிகளுக்குள் அனுமதிச்சீட்டு வைத்திருந்த முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர் .

இதில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் (45) என்ற பொறியாளர் நின்று கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பூமிநாதன் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது அனைத்து பகுதிகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது .இதனால் நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் அங்கும் இங்குமாக அலைந்து திரியக்கூடிய நிலை ஏற்பட்டது.

பின்னர் வேறு வழியின்றி கள்ளழகர் எழுந்தருளும் பகுதியான தண்ணீர் நிரப்பப்பட்ட பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது . இந்நிலையில், அவரது உடலை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் .

கள்ளழகரை சாமி தரிசனம் செய்வதற்காக மண்டகப்படிக்கு வந்த நபர் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது .

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் மண்டகப்படி பகுதிகளில் எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு அதிக அளவிற்கான முக்கிய பிரமுகர்களை அனுமதித்த நிலையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக முக்கிய பிரமுகர்கள் கூட சாமி தரிசனம் செய்ய முடியாத சூழல் உருவானது .

இதேபோன்று கள்ளழகர் புறப்பாட்டின் போது தல்லாகுளம் அம்மா மெஸ் எதிரில் கூட்ட நெரிசலில் மின்சாரம் தாக்கி சந்தோஷ்(18) என்பவர்  படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை பெற்று வருகிறார்

மேலும், கள்ளழகர் சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி கல்லூரி – செல்லூர் செல்லும் சாலையில் படுத்து கிடந்த கண்ணன்(46) என்ற நபர் உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் சித்திரை திருவிழாவில் இப்போது உயிரிழந்த நபர்களுக்கு உரிய இழப்பீடு குடும்பத்திற்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top