பள்ளி குழந்தைகளை ஒவ்வொரு வாகன ஓட்டுநர்களும் தனது சொந்த குழந்தைகளாக நினைத்து வாகனங்களை அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இயக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கேட்டுக் கொண்டுள்ளார் .
தமிழ்நாடு அரசு ஆணை எண்: 727, (போ.7) துறை, நாள்: 30.09.2012ன் கீழ் வெளியிடப்பட்ட தமிழ்நாடு மோட்டார் வாகான பள்ளி வாகனங்கள் மீதான ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு சிறப்பு விதிகள் 2012ன்படி பள்ளி மாணவர்கள் பள்ளி பேருந்துகளில் சிரமமின்றியும், விபத்தின்றியும் பயணம் செய்யும் வண்ணம் பள்ளி பேருந்துகள் ஆண்டுக்கு ஒருமுறை கூட்டாய்வுக்கு உட்படுத்தி தகுதிச்சான்று பெற்ற பின்னரே பொது சாலையில் இயக்கப்பட வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டிருந்தது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பு மைதானத்தில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத்துறை சாலை சார்பாக திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி பேருந்து வாகனங்களையும் மாவட்ட அளவிலான கூட்டாய்வு குழுவினரால் ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி பேருந்து வாகனங்களையும் மாவட்ட அளவிலான கூட்டாய்வு குழுவினருடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொதுச் சாலையில் இயக்குவதற்கு தரமான வாகனம் என நடப்பில் உள்ள தகுதிச் சான்று, நடப்பில் உள்ள காப்பு சான்று, நடப்பு புகை சான்று, வாகனத்தின் முன் பக்கம், பின்புறத்தில் கேமரா, வாகனத்தின் உட்புறமாக சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட அரசு தெரிவித்துள்ள விதிமுறைகள் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஆட்சியர் தெரிவிக்கையில்,
பள்ளி பேருந்துகள் மாணவர்களை அழைத்துச்செல்வதால் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என அனைத்து பள்ளி நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட ஆய்வுக்குழுவினரால் அனுமதிக்கப்பட்ட பள்ளி வாகனங்கள் மட்டுமே பள்ளி குழந்தைகளை அழைத்துவர உபயோகப்படுத்த வேண்டும். திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட அனைத்து தனியார் பள்ளி பேருந்துகளையும் கூட்டாய்வுக்கு உட்படுத்தப்படும்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் சென்ற ஆண்டு பள்ளி வாகனங்கள் எவ்வித விபத்துக்களும் இல்லாமல் பாதுகாப்பாக இயக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டும் பள்ளி குழந்தைகளை ஒவ்வொரு வாகன ஓட்டுநர்களும் தனது சொந்த குழந்தைகளாக நினைத்து வாகனங்களை அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இயக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் பள்ளி பேருந்து வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவக்குழுக்கள் மூலம் விபத்துகளின் போது மேற்கோள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கருணாநிதி சிவக்குமார் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.