திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக சர்வதேச சிறப்பு அன்னையர் தினம் 2025 நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு குழந்தைகளின் அன்னையர்களை சிறப்பிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறப்பு குழந்தைகளின்பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு சிறப்பு அன்னையர் தினம் என்ற தலைமைப்பில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு குழந்தைகளின் பராமரிப்புக்கு தேவையான விழிப்புணர்வு ஆலோசனைகள் குறித்தும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் சிறப்புரையாற்றியதாவது;
மாவட்டத்தில் உள்ள சிறப்புக் குழந்தைகளின் பெற்றோா்கள், பாதுகாவலா்களுக்காக இந்த சிறப்பு அன்னையா் தின விழா நடத்தப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை பராமரிப்பது என்பது மிகவும் சவாலானது. மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றம் காண தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்றாா்.
விழாவில் சிறப்பு குழந்தைகளின் பெற்றோா்கள், பாதுகாவலா்களை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாக சாதனை புரிந்த 50 சிறப்பு அன்னையா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகளையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரத்து 840 மதிப்பிலான மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி, இளநிலை மறுவாழ்வு அலுவலர், தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள், உள்பட பலா் கலந்துகொண்டனா்.