Close
மே 25, 2025 3:39 காலை

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், நாமக்கல் ராமு.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையால், பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் மட்டுமே உள்ள 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு, தமிழக முதல்வர் மற்றும் கல்வி அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மூலம் பல கோடி செலவு செய்து பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. 11ஆம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண்கள், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் என இரண்டும் உயர்கல்வி செல்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் எந்த உயர் கல்விக்கும் இதுவரை எடுத்துக்கொள்ளப்பட்டதே இல்லை.

10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு என தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வுகளை எழுதுவதால் மாணவ மாணவிகள் மனச் சோர்வு அடைந்து விடுகின்றனர். நடப்பு ஆண்டில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் தோல்வியடைந்துள்ளனர். அவர்கள் ஐடிஐ, பாலிடெக்னி, கேட்டரிங் உள்ளிட்ட தொழிற்கல்விக்கு செல்வதாக கூறி, பள்ளிகளில் இருந்து டிசி பெற்று, பள்ளியை விட்டு சென்றுவிடுகின்றனர்.

அதில் பல மாணவர்கள் எந்த தொழிற்கல்வியிலும் சேராமல், பள்ளியை விட்டு இடையில் நின்று வேறு தனியார் வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். மேலும் மத்திய அரசின் சிபிஎஸ்சி வகுப்புகளிலும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் 11ஆம் வகுப்பிற்கு மாநில அளவிலான பொதுத்தேர்வு இல்லை.

எனவே தமிழ்நாட்டின் மாணவர்கள் நலன் கருதி வரும் கல்வி ஆண்டில் +1 பொதுத்தேர்வை ரத்து செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் நடப்பாண்டில் தமிழக அரசால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு கல்விக் கொள்கையில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களையும், 12ஆம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண்களோடு இணைத்து இவை இரண்டையும் மாணவர்கள் உயர்கல்வி செல்வதற்கு தகுதியான மதிப்பெண்களாக எடுத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வைப் பொறுத்த அளவில். இந்த பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இல்லாமல் தான். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை. மாணவர்கள் உயர்கல்விக்கு சென்று உயர்ந்த பதவிகளில் உலகெங்கும் நல்ல நிலையில் இருந்து வருகின்றனர்.

எனவே 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை இனிவரும் காலங்களில் உயர்கல்விக்கு சேர்த்து பயன்படுத்தக்கூடிய திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும். 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை இந்த ஆண்டிலேய ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top