வங்கிகளில் பழைய முறையிலேயே நகைக்கடன் வழங்க வேண்டும் என கோரி, கொமதேக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் வடக்கு ஒன்றிய கொமதேக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம், அணியாபுரத்தில் நடைபெற்றது. நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் சிறப்பு அழைப்பாளாரக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எளிதாக நகைக்கடன் பெறும் வகையில், அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதில் புதிய முறையை ரத்து செய்து, பழைய முறையிலேயே நகைக்கடன் வழங்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகனூரில் இருந்து, நாமக்கல் வரை செல்லும் நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றியமைக்க வேண்டும்.
- மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இணை மின் உற்பத்தி திட்டம், பல கோடி ரூபாய் செலவு செய்து பயனற்ற நிலையில் இருப்பதை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.
- மோகனூர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை அமைத்து, அப்பகுதி மக்களின் விவசாய வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மணி, நாமக்கல் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பழனிமலை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் பிரேமலதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.