தமிழக முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில், முன்னாள் ராணுவத்தினர், 30 சதவீதம் மானியத்தில், ரூ. 1 கோடி வரை கடன் பெற்று தொழில் முனைவோர் ஆகலாம்.
நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், விண்ணப்பித்துள்ள தொழில் முனைவோர்களுக்கு, தொழில் முனைவோர் புத்தாக்க நிறுவனம் மூலம் தொழில் முனைவோர் பயிற்சி நடைபெற்றது,
கலெக்டர் உமா பயிற்சியை துவக்கி வைத்துப் பேசியதாவது:
தமிழக முதல்வர், தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் பணிபுரிந்து வரும் ராணுவ வீரர்களின் நலன் கருதி, முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க, ரூ. 1 கோடி வரை கடனுதவி வழங்கிடும் வகையில், முதல்வரின் காக்கும் கரங்கள் எனும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க, ரூ. 1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் அரசு மூலம் வழங்கப்படும்.
ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினரும், இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். நம் நாட்டின் எல்லையில் மழை, வெயில் பார்க்காமல், உயிரையும் தியாகம் செய்து தாய்நாட்டை பாதுகாக்கும் வீரர்களின் குடும்பத்தார், சுய தொழில் தொடங்கி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்
தொடர்ந்து, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், சுய தொழில் தொடங்க விண்ணப்பித்து, வங்கியில் தற்காலிக அனுமதி பெற்றுள்ள நபர்களுக்கு, தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டது.
டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் ரகுபதி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.