Close
மே 30, 2025 1:00 காலை

பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிகள் திறப்பு, 10ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தல் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 2004 அரசுப் பள்ளிகளும், 177 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் உள்ளன.

இப்பள்ளிகளுக்கு விடுமுறை காலம் முடிந்து திறப்பது குறித்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள், உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள், குடிநீர், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை பணிகளையும் மேற்கொள்ளுவது குறித்தும், வகுப்பறைகளை தூய்மைப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் பேசியதாவது: பள்ளிகளில் குடிநீா், சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். வகுப்பறைகளை தூய்மைப்படுத்தி மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 2175 மாணாக்கர்களும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 2289 மாணாக்கர்களும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1761 மாணாக்கர்களும் தேர்ச்சி அடையவில்லை.

அவர்களுக்கு தற்போது நடைபெற உள்ள துணைத்தேர்விற்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெறுவதற்கு தேவையான உதவிகளை வழங்குவது குறித்து ஆலோசனைகளை வழங்கி, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி பயிலுவதற்கு தேவையான வழிகாட்டி ஆலோசனைகளையும், மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயிலுவதை உறுதி செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, மாவட்ட சுகாதார அலுவலா் பிரகாஷ் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், ஊரக வளா்ச்சித் துறையினா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top