Close
மே 30, 2025 1:23 காலை

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் மன நோயாளிகளுக்கான மீட்பு மையம்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களை பராமரிப்பதற்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், சட்டசபை மானியக்கோரிக்கையில், மனநலம் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களுக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்கள், மாவட்டத்திற்கு ஒன்று வீதம் தலா ரூ. 66 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் என அறிவித்தார்.

அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களுக்கான, அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் அமைக்க, நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அந்த இடத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களுக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் அமைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மருத்துவத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.

மையம் அமைப்பதற்கு தேவையான பணிகளை உடனடியாக மேற்கொண்டு விரைவில் முடிக்க வேண்டும் என அவர் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top