மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான கிரையோஜெனிக் சிஇ 20 இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது என இஸ்ரோ கூறியுள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை அமல்படுத்துவதில் இஸ்ரோ மும்முரமாக உள்ளது. இத்திட்டத்திற்கான கிரையோஜெனிக் சிஇ20 இன்ஜினை நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் உருவாக்ககி, இன்ஜினை பலகட்டமாக பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், கடந்த 29 ம் தேதி கிரையோஜெனிக் சிஇ20 இன்ஜினின் கடல் மட்டத்திலான வெப்ப சோதனை வெற்றிகரமாக நடந்தது. அப்போது இன்ஜினை ரீஸ்டார்ட் செய்வதற்கு தேவையான சோதனையும் செய்யப்பட்டது. கடல் மட்டத்திலான இச்சோதனை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் செய்யப்பட்டது.
கிரையோஜெனிக் இன்ஜினை ரீஸ்டார்ட் செய்வது ஒரு சிக்கலான செயல். இச்சோதனை வெற்றி பெற்றுள்ளது. அப்போது இன்ஜின் இயல்பானதாக இருந்தது. இன்ஜினின் செயல்பாடுகள் எதிர்பார்த்தபடி இருந்தது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.