Close
செப்டம்பர் 20, 2024 1:30 காலை

புதுகை புத்தகத்திருவிழா… பதாகையை வெளியிட்ட எம்எல்ஏ சின்னதுரை

புதுக்கோட்டை

புத்தக திருவிழா பதாகையை வெளியிட்ட கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை

கந்தர்வகோட்டையில் இன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய நிகழ்வில் புதுக்கோட்டை 6 ஆவது புத்தகத் திருவிழா பதாகையை வெளியிட்டு பணிகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தொடக்கிவைத்தார்.

புதுக்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழா மக்கள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்துகிறது.

இம்மாதம் 28 முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் விழாவில் இந்திய விஞ்ஞானிகள், கவிஞர்கள், விருதுபெற்ற முன்னணி எழுத்தாளர்கள், திரைப்பட பாடலாசிரியர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு மாலைநேரங்களில் உரையாற்றுகிறார்கள்.

அதேபோல காலை நேரங்களில் மாணவர்கள் விஞ்ஞானிகள் சந்திப்பு, அறிவியல் அற்புதங்கள், மந்திரமா தந்திரமா, கணக்கும் இனிக்கும், காகித மடிப்பு கலை, கோளரங்கம், அறிவியல் விளையாட்டுகள் போன்றவைகளும் மாணவர் களின் மாலை நேர கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும் வகையில் 10 நாள்களும் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் இன்று கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் அ.ரகமதுல்லா தலைமையில் புத்தகத் திருவிழா பதாகைகள் வெளியிடும் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அனைவரையும் வட்டார செயலாளர் எம்.சின்னராசா வரவேற்றார். தலைமை ஆசிரியர் விஜயலெட்சுமி,தொல்லியல் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன்,வட்டாரக் கல்வி அலுவலர் கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) பிரகாஷ்,

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாக்களின் சிறப்புகளை எடுத்துக்கூறினர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை.  புத்தகத் திருவிழா பதாகையை வெளியிட்டு பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவில் இயக்கமும் இணைந்து நடத்தும் ஆறாவது புத்தக திருவிழா நகர்புறங்களில் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் மிகப் பெரிய வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துகிறது.

தொடர்ந்து புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருவது வாசகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

புதுக்கோட்டையில் நம்முடைய கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் அன்றாட பாடப் புத்தகங்களை தாண்டிய வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
நம் வாழ்வில் தொடர் வாசிப்பு இருந்தால் வாசிப்பு நம்மை உயரத்திற்கு அழைத்து செல்ல உதவும்.

அனைத்து குழந்தைகளும் தொடர்ந்து வாசிக்க வேண்டும் எனவும் பேசினார். மேலும் கந்தர்வகோட்டை தொகுதி முழுவதும் டிஜிட்டல் மயத்தில் இயங்கும் வகையில் கல்வி நிலையங்களை தமிழக அரசின் உதவியோடு மாற்றியமைக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கந்தர்வகோட்டையில் இயங்கும் நூலகத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை பகுதியை கல்விக்கோட்டையாக மாற்ற இதுபோன்ற திருவிழாக்களை ஆசிரியர்கள் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் எம்எல்ஏ சின்னத்துரை.

இவ்விழாவில் ,அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் கு.துரையரசன், சட்டமன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர் இளையராஜா, அறிவியல் இயக்க வட்டார நிர்வாகிகள் ரமேஷ், பாக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிறைவாக ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன்  நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top