ஈரோட்டில் 150 பவுன் நகைகளை திருடிச் சென்ற கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு, பெருந்துறை சாலை, கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. ஆடிட்டரான இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும் உள்ளனர். சுப்புலட்சுமி திருப்பூர் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பல் மருத்துவர்களான மகள் ஜனனி திருமணமாகி ஆஸ்திரேலி யாவில் கணவர் ராகேந்துடன் வசித்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 5 -ஆம் தேதி காலை ஆடிட்டர் துரைசாமி பணி நிமித்தமாக தனது அலுவலகத்துக்குச் சென்று விட, வீட்டை பூட்டி விட்டு மனைவி சுப்புலட்சுமி மாமியார் வீட்டுக்குச் சென்று விட்டார். பின்னர் கணவன், மனைவி இருவரும் மதியம் 2.30 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது.
வீட்டின் பீரோவில் இருந்த தனி அறையின் பூட்டு உடைக்கப் பட்டு அதிலிருந்த 151 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆறுமுகம், இன்ஸ்பெக்டர்கள் சண்முகம் (வீரப்பன்சத்திரம்), சோமசுந்தரம் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீஸார் ஈரோடு மாநகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 2,000க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவு காட்சிகளையும், தமிழகம், கர்நாடகம், ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 3,000 -க்கும் மேற்பட்ட பழைய குற்றவாளிகளின் புகைப்படங்ளையும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
சம்பவம் நடைபெற்ற நாளில் கணபதி நகர், பெருந்துறை ரோடு, நசியனூர் ரோடு, பழையபாளையம் பகுதி களில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதில் பதிவான நபர்களின் புகைப்படங்களை எடுத்து பழைய குற்றவாளி களின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர்.
தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீஸார், 3,000 பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களையும், பல்வேறு வழக்குகளில் சிறையில் இருந்து வெளியே வந்த 1,000 பழைய குற்றவாளிகளின் அண்மைகால திருட்டு செயல்முறைக ளையும் ஆய்வு செய்தனர்.
ஆடிட்டர் துரைசாமியின் வீட்டில் நடந்த திருட்டில் தொடர்பு டை யவர் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் கேரளம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் தனிப்படை போலீஸார் மிகத் தீவிரமாக தேடி வந்தனர்.
பல்வேறு விசாரணைக்கு பிறகே ஆடிட்டர் இல்லத்தில் நகைகளை திருடிச் சென்றவர் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் எனத் தெரியவந்தது. இதையடுத்து இளைஞரைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டினர்.
இந்நிலையில் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் ஈரோடு வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததால் நகரின் முக்கியப் பகுதிகளில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரை காவல் நிலையத் துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், ஆந்திர மாநிலம், காமவரப்பு கோட்டை மண்டலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கொண்டகு டேம் கிராமத்தைச் சேர்ந்த மானுகொண்ட அனில்குமார் (32) என்பதும், இவர் தான் ஆடிட்டர் துரைசாமி வீட்டில் 151 பவுன் நகையை திருடிச் சென்றவர் என்பதும் தெரிய வந்தது.
அனில்குமாரை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து 150 பவுன் நகை, இருசக்கர வாகனம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, கம்பி, கட்டிங் பிளேயர், கையுறை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
மானுகொண்ட அனில்குமார் மீது தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களிலும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. பல மாநில போலீஸாரும் அனில்குமாரை தேடி வந்த நிலையில் ஈரோடு போலீஸாரிடம் அனில்குமார் சிக்கிக் கொண்டுள்ளார்.
திருட்டு நகைகளை விற்று காதலியுடன் உல்லாசம்!!
அனில்குமார் பிடிபட்டது எப்படி என்பது குறித்து போலீஸார் தமிழ்மணி.நியூஸ் செய்தியாளரிடம் கூறியதாவது:
ஆடிட்டர் வீட்டில் 151 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளுடன் எஸ்கேப் ஆன அனில்குமாரின் பூர்வீகம் ஆந்திர பிரதேசமாக இருந்தாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம் 3 மொழிகளையும் அறிந்து வைத்திருந்தார்.
திருமணமாகாத அனில்குமாருக்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. காதலியான அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதற்காக திருடிச் சென்ற 151 பவுன் நகைகளில் 30 பவுன் நகைகளை உருக்கி தங்கக்கட்டியாக மாற்றி விற்று விட்டார்.
அதில் கிடைத்த 10 லட்சம் ரூபாயைக் கொண்டு மது அருந்தியும், தனது காதலிக்கு விதவிதமான ஆடைகளை வாங்கித் தந்தும், உல்லாசமாக பொழுதை போக்கியுள்ளார். ஆடிட்டர் வீட்டில் திருடும்போது தனது கைரேகைகள் எங்கும் சிக்கி விடக்கூடாது என்பதற்காக ரப்பர் கையுறைகளை பயன்படுத்தியுள்ளார்.
தான் சம்பந்தப்பட்ட எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லாத வகையில் லாவகமாகத் திருடிச் சென்றதால் அனில்குமாரைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.இருப்பினும், திருட்டு நடைபெற்ற நாளில் பதிவான விடியோ படக்காட்சிகளிலுள்ள முகங்களையும் பழைய குற்றவாளிகளின் முகங்களையும் ஒப்பிடும்போது, பழைய குற்றவாளியான அனில்குமாரின் முகமும், வீடியோ படக்காட்சியில் பதிவான முகமும் ஒத்து போனது.
ஏற்கெனவே 40க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட வரான அனில்குமாரின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து ரகசிய விசாரணை நடத்தியதுடன், அவரை பின் தொடர்ந்ததால் அனில்குமாரை மடக்கி பிடிக்க முடிந்தது.
தங்கக்கட்டியாக மாற்றி விற்ற 30 பவுன் நகைகள் உள்பட மொத்தம் 150 பவுன் திருட்டு போன நகைகளையும் முழுமையாக மீட்டுள்ளோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஜவஹர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ஆடிட்டர் வீட்டில் நடைபெற்ற திருட்டில் குற்றவாளியைக் கண்டறிவதில் கண்காணிப்பு கேமராவின் பங்கு முக்கியமானது. எனவே பொதுமக்களும் வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்களும் தங்களது வீடுகளில் பாதுகாப்புக் கருதி கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதன் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கச் செய்யலாம்.
வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பதன் மூலம் அப்பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். தெருக்களில் சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது முக்கியம்.
இந்த வழக்கில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் விரைவாக செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்த போலீஸாருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.
#செய்தி- மு.ப.நாராயணசுவாமி #