‘பக்தர்கள் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக, ஏகாதசி நாட்களில் பாரம்பரியமாக நடத்தப்படும் விசேஷ பூஜைகளை எப்படி நிறுத்தலாம்?’ என, கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் நிர்வாகத்துக்கு சுப்ரீம்கோர்ட்கேள்வி எழுப்பியுள்ளது.
குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில், உதயஸ்தமனா என்ற பூஜை தினமும் நடத்தப்படும், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை குறிக்கும் வகையில் இந்த பூஜை பாரம்பரியமாக நடத்தப்படுகிறது.
இந்நிலையில், பக்தர்கள் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக, ஏகாதசி தினத்தில் மட்டும் இந்த பூஜையை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து, அந்தக் கோவிலில் பூஜைகள் நடத்தும் உரிமை பெற்றுள்ள குடும்பத்தைச் சேர்ந்த பி.சி.ஹாரி என்பவர், சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பெஞ்ச் கூறியுள்ளதாவது:
இந்த உதயஸ்தமனா பூஜை உள்ளிட்டவை ஆதி சங்கரரால் உருவாக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. கடவுளின் அருளைப் பெறுவதற்காக நடத்தப்படும் இதுபோன்ற பாரம்பரிய பூஜைகளை, பக்தர்கள் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக எப்படி நிறுத்தலாம்? கோவில் தந்திரி இதற்கு எப்படி ஒப்புதல் அளித்தார்? இது போன்று பூஜைகளை நிறுத்தும் முடிவை எப்படி கோவில் நிர்வாகம் எடுக்கலாம்? இதுகுறித்து, கோவில் நிர்வாகம், மாநில அரசு பதிலளிக்க வேண்டும்.
தற்போதைக்கு இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. கோவிலின் இணையதளத்தில் உள்ள தினசரி பூஜைகள் பட்டியலில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். இந்த பிரச்னை தொடர்பாக விசாரித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.