Close
செப்டம்பர் 20, 2024 4:15 காலை

ஈரோடு இடைத்தேர்தல்: இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறுவார்- ஜி.கே.வாசன்

புதுக்கோட்டை

தமாகா தலைவர் ஜி.கே.. வாசன்

ஈரோடு  கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே. வாசன்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக  ஜி.கே.வாசன் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம்  அவர்  மேலும்  கூறியதாவது:

அதிமுக கூட்டணியின் முதன்மை கட்சி. அந்த கட்சி பல்வேறு தேர்தல் வியூகங்களை எங்களோடு கலந்துபேசி இந்த தேர்தலை உறுதியாக வெல்லக்கூடிய ஒரு நிலையை எடுக்க வேண்டும். அதற்காக ஒரு நல்ல சூழலை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம்.

மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி மீண்டும் உறுதியாக வெற்றி பெற வேண்டும். அதன் அடிப்படையிலேயே ஒரு வெற்றி முடிவை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது.

த.மா.கா அ.தி.மு.க. கூட்டணி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். எங்களுடைய கூட்டணியில் பா.ஜ.க.வும் உள்ளது. இந்த நிலை தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தி.மு.க. அரசின் எதிர்மறை ஓட்டுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது எங்களது வெற்றியை உறுதி செய்யும். இன்னும் இரண்டு நாட்களில் நல்ல முடிவு வெளிவரும் என்று எதிர் பார்க்கிறோம்.

பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையின் செயல்பாடுகள் நன்றாக உள்ளதால் பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது. தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நின்றால் சிறப்பாக இருக்கும் என்பதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் அ.தி.மு.க.விற்கு விட்டுக் கொடுத்துள்ளது.

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இரட்டை இலை சின்னத்தில் நின்றால் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது.

அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வியூகத்தை நாங்கள் அமைத்துள்ளோம். நிச்சயம் அது வெற்றி வியூகமாக மாறும். அரசியலில் நம்பிக்கைதான் மிக முக்கியம். அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சனை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

அரசியலில் நேர்மறையான கருத்துகளை மட்டுமே நினைப்பவன் நான். இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் செயல்பாடு வேகமாக இருக்கும். தற்போது 32 அமைச்சர்களை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தி.மு.க. நியமித்துள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை என்றார் ஜி.கே. வாசன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top