புதுக்கோட்டை உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா
புதுக்கோட்டை உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று 10.07.2023 காலை 07.30 மணியளவில் ஆய்வு மேற்கொண்டார்.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் உழவர் சந்தையில் செயல்படுகிற டான்ஹோடா விற்பனை மையத்தின் சார்பாக தக்காளி கிலோ ரூ. 80க்கு பொதுமக்க ளுக்கு விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.
பின்னர் உழவர் சந்தையில் செயல்படுகின்ற அனைத்து கடைகளையும் விற்பனை செய்யப்படும் காய், கனி பொருள்களையும் பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் மெர்சிரம்யா கூறியதாவது: தோட்டக் கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில் டான்ஹோடா விற்பனை மையத்தின் சார்பாக பொது மக்களுக்கு தக்காளி கிலோ ரூ.80 -க்கு விற்பனை செய்யப் படுகிறது.வெளிச்சந்தையில் ரூ.110 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உழவர் சந்தையின் வெளிப்புறத்தில் காய்கனி கடை வைத்திருப்பவர்கள் விவசாயிகளாக இருந்தால் அவர்களுக்கு உழவர் சந்தையில் இடம் ஒதுக்கப்படும். உழவர் சந்தைகளின் மேம்பாட்டு பணிகள் அரசால் ஒதுக்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
பின்னர் நகராட்சி சந்தைப்பேட்டையில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் துணை இயக்குநர் (தோட்டக்கலை) குருமணி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் எம். லியாகத் அலி, நகராட்சி உதவி பொறியாளர் கலியகுமார், நகரமைப்பு அலுவலர் விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.