ஆட்டோ ஓட்டுநர்கள் காப்பீட்டு செய்து கொள்ள வேண்டியது கட்டாயம் என்றார் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு.
சக்தி மசாலா நிறுவனத்தின் அங்கமான சக்திதேவி அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் சக்தி மருத்துவமனையின் கீழ் 22 ஆண்டுகளாக இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, சலுகை விலையில் மருந்துகள் வழங்கியும் மற்றும் மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. செய்தும் வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஈரோடு நகரில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களை அமைப்புச்சாரா நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்து, நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கி அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் ஈரோடு, பெருந்துறை ரோட்டில் உள்ள சக்திதுரைசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலர்களான டாக்டர்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி முன்னிலை வகித்தனர்.பி.சி.துரைசாமி அனைவரையும் வரவேற்று
பேசியதாவது:
ஆட்டோ ஓட்டுநர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்துமாறு முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த முகாமை நடத்திக் கொண்டிருக்கிறோம். முகாமில் பங்கேற்காத நபர்களும் நலவாரிய அட்டையை பதிவு செய்வதற்கான வாய்ப்பு தரப்படும். இது போன்ற நிகழ்ச்சியை நடத்துவதற்காக எங்களுக்கு தூண்டுகோலாக இருந்த முன்னாள் தலைமைச் செயலர் இறையன்புக்கு நன்றியை செலுத்துகிறோம்.
ஆட்டோ ஓட்டுநர்களில் 5 முதல் 10% வரையிலான ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமே நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு குடும்ப பாதுகாப்பு, மருத்துவ பாதுகாப்பு வழங்குவதற்காகவே நலவாரிய அட்டைகள் வழங்கப்படுகிறது. இதனை முழுமையாக ஆட்டோ ஓட்டுனர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.
மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்து பேசியதாவது:நலவாரிய திட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நலத்திட்ட உதவிகளை பெற உறுப்பினர்களாக சேர்வது மிகவும் அவசியம் என்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் தலைமைச் செயலர் முனைவர் வெ. இறையன்பு, பயனாளிகளான 150 . ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிதாக பதிவு செய்து நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும், 2 செட் சீருடையும் வழங்கிப் பேசியதாவது:
வெளியூர்களுக்கு தொடர்வண்டி மூலமாகவோ விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள் முதலில் சந்திப்பது ஆட்டோ ஓட்டுநர்களை தான். அந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அந்த மாநிலத்தின் செயல்பாடுகளை அந்த சுற்றுலா பயணிகள் மதிப்பிடுகிறார்கள்.
எனவே ஆட்டோ ஓட்டுநர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் மரியாதையாகவும் நல்ல முறையிலும் நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. நான் 2007 -ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை முதன்மைச் செயலராக இருக்கும் பொழுது சிறப்பாக பணியாற்றி வந்த 100 ஆட்டோ ஓட்டுநர்களை தேர்வு செய்து அவர்கள் சுற்றுலா பயணிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.
அவர்களிடம் நியாயமான கட்டணத்தை வாங்குவது குறித்தும், அவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளாமல் நல்ல முறையில் அவர்களை அழைத்துச் சென்று நம் மாநிலம் குறித்த நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துவது குறித்து பயிற்சி அளித்தோம்.
பின்னர் அந்த நூறு ஆட்டோ ஓட்டுநர்களின் பெயர்களையும், அலைபேசி எண்களையும் இணையதளத்தில் பதிவு செய்து வைத்தோம் அதன் பலனாக வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முன்கூட்டியே அந்த ஆட்டோ டிரைவர்களிடம் பேசி தயார் நிலையில் அவர்களை வைத்துக்கொண்டு அந்த ஆட்டோவில் நல்லபடியாக சுற்றுப்பயணம் செய்துவிட்டு சென்றனர்.
பிற்காலத்தில் அந்த ஆட்டோ டிரைவர்களுக்கு ஆங்கிலத்தில் உரையாற்றுவதற்கு பயிற்சி அளித்தோம். இந்த நடைமுறையை சென்னையில் இப்பொழுதும் பின்பற்றி வருவதால் பல ஆட்டோ ஓட்டுநர்கள் சிறந்த நபர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இதே முறையை பின்பற்றி ஈரோட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடமும் ஆட்டோ ஓட்டுவதற்கு நடந்து கொள்வது குறித்த பயிற்சியை வழங்க மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுவாக ஆட்டோ ஓட்டுனர்கள் 4 வகையான விஷயங்களை பின்பற்ற வேண்டும்.
ஆட்டோ ஓட்டுனர்களின் தோற்றம், ஆட்டோவில் ஏறியதும் நறுமணம் கமழ வைப்பது, பயணிகளிடம் ஒத்தாசையாகவும் அன்பாகவும் மரியாதையுடனும் நடந்து கொள்வது, முக்கியமாக நேர்மையுடன் நடந்து கொள்வது குறைந்த கட்டணத்தை வசூலிப்பது இவைகளை தான் ஆட்டோ ஓட்டுனர்களிடம் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்களாக உள்ளது.
பல ஆட்டோ ஓட்டுநர்கள் காப்பீட்டு திட்டத்தில் இணையாமல் இருக்கிறார்கள். வாகனங்களில் பயணித்துக் கொண்டி ருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களை காப்பீட்டு திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஏனென்றால் அவர்களது வாழ்க்கைக்கு பிறகு அவர்களின் குடும்பத்திற்கு கிடைக்கக்கூடிய அந்த காப்பீட்டு தொகை மிகவும் உதவிகரமாக இருக்கும். ஆனால் ஏனோ பல ஆட்டோ ஓட்டுநர்கள் இதனை உணராமல் உள்ளனர்.தினந்தோறும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வைக்கவும், காப்பீட்டில் முதலீடு செய்வதும் அவசியம்.
கொரோனா காலத்தில் சேமிப்பு தொகையை வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களிடம் இருந்த சேமிப்புத் தொகையை வைத்து குடும்பத்தை சமாளித்துக் கொண்டனர். ஆனால் மற்றவர்களோ மிகவும் துன்பப்பட்டனர்.
பல ஆட்டோ ஓட்டுனர்கள் சில தீய பழக்கங்களை பழகிக் கொண்டு பிற்காலத்தில் மிகவும் துன்பப்படுகின்றனர். அவர் களுக்கு நான் வைக்கும் ஒரே கோரிக்கை; தயவு செய்து இந்த தீய பழக்கங்களில் இருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் சிறந்த முறையில் திட்டமிட்டு தங்கள் வாழ்க்கையை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றார் இறையன்பு.
முன்னதாக ஈரோடு மாவட்ட தொழிலாளர் இணை ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) டி.முருகேசன் வாழ்த்துரை வழங்கினார். சக்தி மருத்துவமனையின் மருத்துவர்கள், தன்வந்திரி மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்கள் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார் களுக்கும் இலவச மருத்துவ ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்கினர்.
#செய்தி-ஈரோடு மு.ப.நாராயணசுவாமி#