தீபாவளி போனஸ் ரூ5000 ம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வருக்கு அஞ்சல் அட்டை ( கார்டு) அனுப்பும் மாநிலந் தழுவிய இயக்கம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து கட்டுமான தொழிலாளர்கள் ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாடு ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர் சம்மேளனத் தின் சார்பில் தீபாவளி பண்டிகை போனஸ் ரூ 5000 ம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் முதல்வருக்கு தபால் கார்டு அனுப்பும் இயக்கம் இன்று தஞ்சை மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.
தஞ்சாவூரில் கீழவாசல் கிளை தபால் அலுவலகம் முன்பு ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.செல்வம், எம்.சிகப்பியம்மாள் தலைமையில் நூற்றுக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தபால் கார்டுகள் அனுப்பி வைத்தனர்.
தபால் கார்டில் தங்களது கோரிக்கையாக தீபாவளி போனஸ் ரூபாய் 5000 வழங்க வேண்டும். நலவாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தை ரூ 2000 மாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப் பட்டிருந்தது.
ஒவ்வொரு கட்டுமான தொழிலாளர்களும் தபால் கார்டில் தங்கள் கையெழுத்து, முகவரியுடன் தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பி வைத்தனர்.தஞ்சாவூர் மாநகரில் கீழவாசல், சத்யா நகர்,சேப்னாவாரி கிளைகள் உள்ளிட்டு மூன்று இடங்களில் நடைபெற்றது.
இதேபோல் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருபுவனம், திருப்பனந்தாள், ஒரத்தநாடு, பாப்பாநாடு, ஆம்லாபட்டு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம் கக்கரைக்கோட்டை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் ஆயிரம் அஞ்சல் அட்டைகள் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த இயக்கத்தில் கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ஆர் . தில்லைவனம், மாவட்ட தலைவர் சேகர், நிர்வாகிகள் சீனி.சுகுமாறன், செளந்தரராஜன், ஏ ஐ டி யூ சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், மாவட்ட தலைவர் வெ. சேவையா, மாவட்ட செயலாளர் துரை .மதிவாணன், தெரு வியாபார சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.