Close
நவம்பர் 21, 2024 5:47 மணி

பாஜக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் பேட்டி..!

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், மாநில செய்தித்தொடர்பாளர் டாக்டர் செந்தில் பேசினார்.

நாமக்கல்:
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியப் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடையும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாக்டர் செந்தில் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கறுப்பு பணத்தை மீட்போம் என பாஜக கூறியது. தற்போது பாரத ஸ்டேட் பேங்க் அளித்துள்ள தேர்தல் நிதி பத்திரங்களில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம், தொழில்வளத்தை பெருக்குவோம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், நதி நீரை இணைப்போம் போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, ஆட்சியைப் பிடித்த பாஜக தற்போது அனைத்தையும் மறந்துவிட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான அரசாக மட்டுமே நடைபெற்று வருகிறது.

பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். குறிப்பாக எம்எஸ்எம்இ என்னும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவிகள் செய்யாதால், சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை இல்லாத்திண்டாட்டம் இந்தியாவில் உருவாகியுள்ளது. இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக உருவாக முடியாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு தேடி வெளிநாடுகளுக்கு சென்றவன்னம் உள்ளனர். இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டு 15,783 பேர் வேலை கிடைக்காமல் இந்தியாவில் தற்கொலை செய்துள்ளனர்.

2019ம் ஆண்டு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் 700க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லாமல் 11,290 விவசாயிகள் தற்கொலை செய்து இறந்துள்ளனர்.

பிஎஸ்என்எல் உட்பட ஏராளமான பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டு, தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மின்சார உற்பத்தி, துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட மிக முக்கிய தொழில்கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது.

வருகின்ற லோக்சபா தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற்றால், இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வீழ்ச்சியடையும். எனவே இந்தியாவைக் காப்பாற்ற அனைவரும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் திமுகவுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக நடைபெற்றுள்ளது.

தொகுதிகள் முடிவானவுடன் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என கூறினார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரப்பன், நகர காங்கிரஸ் தலவர் மோகன், புதுச்சத்திரம் வட்டார காங்கிரஸ் தலைவர் இளங்கோ உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top