Close
நவம்பர் 21, 2024 11:33 மணி

காட்டுநாயக்கர் சாதிச் சான்று தரலைன்னா நானே போராட்டக்களத்தில் இறங்குவேன்: செல்லூர் ராஜு..!

காட்டு நாயக்கர் சாதி சான்று கேட்டு போராடும் மக்களுடன் முன்னாள் அதிமுக அமைச்சரும் எம்எல்ஏவுமான செல்லூர் ராஜு.

பள்ளிக்கூட பிள்ளைகள் விஷயத்தில் அதிகாரிகள் விளையாடக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்துள்ளார்.

மதுரை:

மதுரை, பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் வசித்துவரும் மக்களுக்கு இந்து காட்டு நாயக்கர் சாதி சான்றிதழ் வழங்காத கோட்டாட்சியரை கண்டித்து, மூன்றாவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, முன்னாள் அமைச்சரும் மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லுர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது :

கடந்த மூன்று நாட்களாக எனது தொகுதிக்குட்பட்ட பரவை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமுதாயத்தினர் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் சாதி சான்றிதழ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்தி மூலம் அறிந்து, இங்கு வந்தேன்.

இது குறித்து தற்போதைய மதுரை ஆர்.டி.ஓ. புதிய தகவல்களைச் சொல்லி சாதி சான்றிதழ் வழங்காமல் தடுப்பதாக சொல்கிறார்கள். பத்தாம் வகுப்பு மாணவிக்கு சான்றிதழ் கொடுத்தால் தான், மேற்படிப்புக்கு போக முடியும். அவருக்குரிய சலுகைகள் கிடைக்கும். சாதி சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றபோது, மாணவியை தரக்குறைவாக பேசி உள்ளதாக தகவல் கிடைத்தது.

நான், சட்டமன்ற உறுப்பினராக, முன்னாள் அமைச்சராக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். நான், மட்டுமே இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு 132 சான்றிதழ் வாங்கி கொடுத்திருக்கிறேன்.

மேலும் 135 மாணவர்களுக்கு சான்றிதழ் வாங்கி கொடுத்திருக்கிறேன். இதேபோல், எனது தொகுதிக்குட்பட்ட துவரிமான் கிராமத்திலும் வாங்கி கொடுத்திருக்கிறேன். 2023 வரை சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். இடையில் தடைபட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த காட்டுநாயக்கர் சமுதாயம் மிகவும் பின்தங்கிய சமூகம். இவர்கள் படிக்க வருவதே குறைவு. அவர்கள் படிப்பதற்கு ஆர்வப்படுத்த வேண்டும். என்னுடைய பிள்ளையை பள்ளிக்கு அனுப்பவில்லை என்றால், மனசுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்குமோ அந்த வேதனையுடன் இங்கு வந்தேன்.

பள்ளிக்கூட பிள்ளைகள் விஷயத்தில் அரசாங்க அதிகாரிகள் விளையாடக்கூடாது இதை எச்சரிக்கையாக கூறுகிறேன். வழக்கமாக எல்லா சமுதாயத்திற்கும் என்ன மாதிரி சான்றிதழ் கொடுக்கிறார்களோ, அதே போல் இவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சொல்லி இருக்கிறேன். மேல் முறையீடு செய்யச் சொல்லுங்கள் பரிசீலிக்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் என்னிடம் கூறும்போது கோட்டாட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். என்னிடம் கொடுக்கவில்லை என சொல்லி உள்ளார்.

ஆகையால், போராடுபவர்களிடம்,மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுக்க கூறி இருக்கிறேன் என்று கூறினார்.

முதலமைச்சர் வருவதால் திங்கட்கிழமை வரச்சொல்லுங்கள். நிச்சயமாக சான்றிதழ் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்றும் கலெக்டர் கூறினார். கண்டிப்பாக கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த சமுதாயத்திற்கு சான்றிதழ்களை கொடுப்பதற்கு இவர்கள் தாத்தா, அப்பா வழியில் என்ன சான்றிதழ் இருக்கிறதோ அதை வைத்து கொடுக்க வேண்டும்.

அவ்வாறு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு உடன் பிறந்த சித்தப்பா பெரியப்பா முறையில் பரிசீலித்து சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த மக்களுக்கு விரைவில் சான்றிதழ் வழங்கவில்லை என்றால் நானே இவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், பரவை முன்னாள் சேர்மன் ராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top