Close
நவம்பர் 14, 2024 4:54 காலை

முட்டை இறக்குமதிக்கு கத்தார் புதிய கட்டுப்பாடு: நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி பாதிப்பு

வெளிநாடுகளில் இருந்து முட்டை இறக்குமதிக்கு, கத்தார் நாடு திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளதால், நாமக்கல் பகுதியில் இருந்து முட்டை ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து நாமக்கல் கால்நடை மற்றும் விவசாய பண்ணையாளர்கள், வர்த்தகர்கள் சங்க பொதுச்செயலாளரும், முட்டை ஏற்றுமதியாளருமான டாக்டர் செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் பகுதியில் இருந்து பல்வேறு அரபு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கத்தார் நாடு தற்போது, தனது முட்டை இறக்குமதிக் கொள்கையில், புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி, ‘ஏஏ’ மற்றும் ‘ஏ’ என வகைப்படுத்தப்பட்ட முட்டைகள் மட்டுமே, அந்நாட்டில் இறக்குமதிக்கு அனுமதிக்கப்படுகிறது.

அதாவது, முட்டைகளில் கிரேடிங் செய்யும்போது, 70 கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட எடையுள்ள ‘ஏஏ’ முட்டைகள் என்றும், 60 கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட எடையுள்ளவை ‘ஏ’ முட்டைகள் என்றும், 50 கிராம் எடையுள்ள முட்டைகள் ‘பி’ வகையிலும், 50 கிராமுக்கு கீழ் உள்ளவை ‘சி’ வகையிலும் வகைப்படுத்தப்படுகிறது.
இந்தவகையில், இனி ‘ஏஏ’ மற்றும் ‘ஏ’ முட்டைகள் மட்டுமே கத்தார் நாட்டில் இனி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும். கடந்த, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, முட்டை இறக்குமதியில் கத்தார் நாட்டிற்கு நாம் வர்த்தகம் செய்து வருகிறோம்.

நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளில் பெரும்பாலானவை ‘பி’ வகையிலான முட்டைகள். நாமக்கல் மட்டுமல்லாது, இந்திய முட்டைகள் பொதுவாகவே, 50 முதல், 60 கிராம் வரை எடையுள்ளதாகவே இருக்கும். காரணம், நமது நாட்டின் முட்டைக்கோழி இனத்தின் தன்மை அப்படி.

ஆனால், நமது முட்டைகள் உலகளாவிய ஊட்டச்சத்து தரத்தை பூர்த்தி செய்யும் அளவிற்கு இருக்கும் என்பது உண்மை. இந்நிலையில், கத்தார் நாட்டின் இந்த புதிய முட்டை இறக்குமதிக் கொள்கையா, நம் இரு நாடுகளிடையே இருக்கும் நீண்டகால வர்த்தக உறவை சீர்குலைக்குலைப்பதுடன் பண்ணையாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

மேலும், இந்திய முட்டை ஏற்றுமதி துறை மற்றும் நமது பொருளாதாரம் இரண்டையும் எதிர்மறையாக பாதிக்கும். தற்போதுள்ள ‘ஏஏ’ மற்றும் ‘ஏ’ முட்டை வகைகளுடன், நமது நாட்டின் ‘பி’ வகை முட்டைகளையும் இறக்குமதி கொள்கையில் சேர்ப்பதை மறுபரிசீலனை செய்ய கத்தார் அதிகாரிகளுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பண்ணையாளர்களுக்கு உதவ வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top