Close
நவம்பர் 21, 2024 1:49 மணி

காதல் மனைவியை 8 துண்டுகளாக வெட்டிய கணவன், ஆன்மீக நகரத்தை உலுக்கிய கொடூர கொலை சம்பவம்..!

கைது செய்யப்பட்டுள்ள கோபி ,பைல் படம்

திருவண்ணாமலையில் தனது காதல் மனைவியை எட்டு துண்டுகளாக வெட்டி கொன்று அந்த உடல் துண்டுகளை கிருஷ்ணகிரி காட்டுப்பகுதியில் வீசிய கணவனின் கணவனின் கொடூர செயலால் திருவண்ணாமலை நகரமே பரபரப்பானது.

திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட பே கோபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி சரண்யா. திருவண்ணாமலையில் உள்ள கவரிங் கடையில் பணிபுரிந்து வந்த சரண்யாவை காதலித்து கோபி திருமணம் செய்து கொண்டார். ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த தீபாவளி தினத்தன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  அன்று இரவு வீட்டில் இருந்து சரண்யா திடீரென மாயமாகியிருக்கிறார்.

`அம்மா எங்கே?’ என குழந்தைகள் கேட்டதற்கு, `சண்டைப் போட்டுக்கிட்டு அவள் அம்மா வீட்டுக்குப் போய் விட்டதாக சொல்லி கோபி நாடகமாடியிருக்கிறார். அவருக்கு நேர்ந்த கதி குறித்து அப்போது யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.

தீபாவளியன்று மகளுக்கு வாழ்த்து கூற அவரது தாய் காவேரி சரண்யாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபொழுது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து பலமுறை தொடர்பு கொண்டு பேச முடியாததால், சந்தேகம் அடைந்த காவேரி , மகளின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.

அப்போது கடந்த சில நாட்களாகவே மகள் வீட்டில் இல்லை என கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த காவேரி தங்களது உறவினர் இல்லங்களிலும் தேடியும்  பலன் இல்லாததால் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் தனது மகள் காணவில்லை என புகார் அளித்தார்.

இதுகுறித்து மருமகன் கோபியிடம் கேட்ட பொழுது சரியான பதில் அளிக்காமல் இருந்ததால், புகாரில் மருமகன் மீது சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி கோபியை கண்காணித்து வந்தனர். ஆனால் மனைவி காணாமல் போன எந்த ஒரு சுவடும் தெரியாமல் ஆட்டோ ஓட்டுனர் கோபி திருவண்ணாமலைிலேயே சுற்றி வந்தார்.

மாமியார் புகார் அளித்தது தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த அவருக்கு காவல்துறையினர் வீட்டிற்கு சென்றதும் தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் கோபியை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

காவல்துறை அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. காவல்துறையிடம் கோபி அளித்த வாக்குமூலத்தில், தன் மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

விசாரணையில் அவர் மேலும் கூறியதாவது: எனக்கு இது இரண்டாவது திருமணம். முதல் மனைவியை பிரிந்துவிட்டேன். எனக்கும், என் சரண்யாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் அவளை கொலை செய்ய திட்டமிட்டேன். அவள் உடலை அடைக்க சூட்கேஸ் வாங்கினேன்.

சண்டையின்போது ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தேன். பிறகு உடலை தலை, மார்பு, தொடை உள்பட 8 பாகங்களாக வெட்டி சூட்கேஸில் அடைத்தேன். பிறகு அதை கிருஷ்ணகிரி அருகே காட்டுப் பகுதியில் வீசினேன் என்று கூறினார்.

அவர் சொன்ன தகவலின் அடிப்படையில் கிருஷ்ணகிரி சென்ற காவல்துறை சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். கோபியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் கோபியின் தாயார் மற்றும் கார் ஓட்டுனர் விமல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வேலூர் தடயவியல் நிபுணர்கள் கோபி சரண்யா வசித்து வந்த பே கோபுர தெருவில் உள்ள வீட்டில் தடயங்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top