நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் செயல்படத் துவங்கியுள்ளதால், பயணிகளின் வசதிக்காக 5 புதிய நகரப் பேருந்துகளை ராஜேஷ்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட முதலைப்பட்டியில், ரூ. 20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய பேருந்து நிலையத்தை கடந்த 22ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதையடுத்து, கடந்த, 10ம் தேதி முதல், வெளியூர் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
பழைய பேருந்துநிலையத்தில் இருந்து, புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல, 10 நிமிடத்திற்கு ஒரு முறை என, அரசு மற்றும் தனியார் பேருந்துகள், 117 நடைகள் தினமும் இயக்கவேண்டும் என கலெக்டர் அறிவித்தார்.
புதிய பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, திருச்சி, துறையூர், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மட்டுமே, பழைய பேருந்து நிலையம் வழியாக இயக்கப்படுகிறது.
மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நகர பேருந்தில் புதிய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து வெளியூர் பேருந்துகளில் செல்லும் நிலை உள்ளது.
அதனால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்கிடையில், ராஜ்யசபா எம்.பி. ராஜேஸ்குமார் புதிய பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதையடுத்து, பொதுமக்கள் சிரமமின்றி பயணங்கள் மேற்கொள்ளும் வகையில், அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை செய்து, 3 புதிய வழித்தடங்களில், 5 பேருந்துகளை இயக்க அவர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
அதன்படி, 3 புதிய வழித்தடங்களில், 5 அரசு டவுன் பேருந்துகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.பி. ராஜேஸ்குமார், நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பழைய பேருந்து நிலையம் செல்லும் புதிய வழிதடத்தில் அரசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நாமக்கல் பழைய பேருந்து நிலையம் முதல், புதிய பேருந்து நிலையம் வரை, 6 கி.மீ., தூரத்திற்கு, 7 ரூபாய் கட்டணத்தில், ஒரு பேருந்து 32 நடைகள் இயங்கும். பழைய பேருந்து நிலையம் முதல், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, 9 கி.மீ. தூரத்திற்கு, ரூ. 10 கட்டணத்தில், 2 அரசு நகரப் பேருந்துகள் 54 நடைகள் இயக்கப்படும்.
பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, வள்ளிபுரம் பைபாஸ் வரை வரை 6 கி.மீ., தூரத்திற்கு, 2 அரசு பேருந்துகள், 72 நடைகள் இயக்கப்படும்
மொத்தம் 5 பேருந்துகள் 158 நடைகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகளில், மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள், கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
இந்த பேருந்துகள், அதிகாலை 5:30 முதல், இரவு, 9:45 மணி வரை இயக்கப்படுகிறது. இதன்மூலம் பயணிகள் சிரமமின்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பழைய பேருந்து நிலையத்திற்கு கூடுதல் பேருந்து வசதி: எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்டிற்கு கூடுதல் டவுன் பஸ் வசதியை, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் உமா, எம்.பி. மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.