திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா வரும் வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றாக கருதக்கூடிய திருக்கார்த்திகை தீபத் திருவிழா கார்த்திகை மாதங்களில் நடைபெறும்.
தொடர்ந்து கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண பல லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திருவண்ணாமலையில் குவிந்து அண்ணாமலையாரை தரிசிப்பதுடன் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம் பாதையில் கிரிவலம் மேற்கொள்வர்.
இந்த ஆண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. டிசம்பர் 4 ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கப்படும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் விழாக்களின் முக்கிய விழா நாளாக கருதப்படும். ஏழாம் நாளன்று மாட வீதியில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வரும்.
பராசக்தி அம்மன் தேர் முழுக்க முழுக்க பெண் பக்தர்கள் மட்டுமே மாடவீதி முழுவதும் வடம் பிடித்து இழுத்து வருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி பந்தகால் முகூர்த்தம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அன்று முதல் திருக்கோவிலில் பூர்வாங்க பணிகளுக்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வந்த நிலையில் திருவிழாவின்போது 10 நாட்கள் காலையும் மாலையும் வீதி உலா வர உள்ள வாகனங்களை பழுது பார்க்கும் பணியில் கோவில் மிராசு ஆச்சாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனங்கள் அனைத்தும் ஆயிரம் கால் மண்டபம் அருகே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
தற்போது ரிஷப வாகனம், இந்திர விமானம், பூத வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டு பல்வேறு வண்ணங்களில் வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஏழாம் திருவிழா அன்று மாடவீதியில் வரும் பஞ்சமூர்த்திகள் தேர்தலில் பொருத்தப்படும் குதிரைகளுக்கும் வண்ணம் தீட்டு பணிகளும் தேரினை வடம் பிடித்து இழுத்துச் செல்லக்கூடிய சங்கிலிகளுக்கும் வர்ணம் தீட்டும் பணியும் மின்விளக்குகள் பொருத்தும் பணியும் மும்முறமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.