Close
நவம்பர் 21, 2024 1:34 மணி

ஒரே பைக்கில் சென்ற மூன்று மாணவர்கள், பரிதாப மரணம்..!

விபத்து- மாதிரி படம்

ஒரே பைக்கில் பயணம் செய்த மூன்று மாணவர்கள் மரத்தின் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வன்னியன். இவரது மகன் முத்துலிங்கம், அதே போன்று சின்ன ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ராமன், இசுக்கழிகாட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் .

இவர்கள் மூவரும் வேட்டவலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர்.  இவர்கள் மூவரும் நண்பர்கள் ஆவார்கள்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் இந்த மூன்று பேரும் ஒரே பைக்கில் ஜெகதீஷை வீட்டில் விட்டுவிட்டு வர சென்றனர். முத்துலிங்கம் பைக்கை ஓட்ட மற்ற இருவரும் பின்னால் உட்கார்ந்து சென்றுள்ளனர்.

இவர்களது பைக் ஆவூர் முருகர் கோயில் அருகே சென்றுக் கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் உள்ள அரச மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த முத்துலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராமனும், ஜெகதீஷூம் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து அந்த வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் முத்துலிங்கம் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேல் சிகிச்சைக்காக ஜெகதீஷ் என்ற மாணவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமன் என்ற மாணவர் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஜெகதீஷ் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

விபத்து குறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பர்களான மூன்று 12ம் வகுப்பு மாணவர்கள் விபத்தில் சிக்கி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேகம் ஆபத்து என்பதை உணராமல் ஒரே பைக்கில் மூன்று பேர் பயணித்தது விபத்துக்கு காரணம் எனவும், ஹெல்மெட் அணியாததால் மரத்தின் மீது தலை மோதி உயிரிழக்க நேரிட்டுள்ளது, என  சொல்லப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top