நாமக்கல் மற்றும் சங்ககிரிக்கு கூடுதல் ரயில் வசதி கேட்டு, மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் மனு அளித்தார்.
நாமக்கல் கொமதேக எம்.பி. மாதேஸ்வரன், டில்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:
சென்னையில் இருந்து போடி வரை செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலை. நாமக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல உத்தரவு பிறப்பித்ததற்கு நாமக்கல் பகுதி பொதுமக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், பயணிகளின் நலன் கருதி, சேலம் – சென்னை எக்மோர் இடையே இயக்கப்படும் ரயிலை, சேலத்தில் இருந்து நாமக்கல் நாமக்கல், மோகனூர் வழியாக கரூர் வரை நீட்டிப்பு செய்யவேண்டும். பாலக்காட்டில் இருந்து ஈரோடு வரை இயக்கப்படும் மெமு ரயிலை கரூர், மோகனூர், நாமக்கல் வழியாக சேலம் வரை நீட்டிப்பு செய்யவேண்டும்.
இது நாமக்கல் பகுதியில் உள்ளவர்கள் வியாபாரம், கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக ஈரோடு, திருப்பூர், கோவை செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.
சென்னை சென்ட்ரல் -கோவை இடையே இயக்கப்படும் தினசரி இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சங்ககிரியில் நிற்பதில்லை. கடந்த 1924 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சேலம் வந்தபோது, சங்ககிரி ரயில் நிலையத்தில் இறங்கி திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் சென்றார் என்பது வரலாற்று குறிப்பில் உள்ளது. தற்சமயம் நூற்றாண்டு விழா கொண்டாடும் சங்ககிரி ரயில் நிலையத்தில், கோவை – சென்னை சென்ட்ரல் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்டு அமைச்சர், மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.