புயல் பாதிப்பின் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் புயல் மழையால் ஏராளமான பொதுமக்கள் பாதிப்படைந்தனர். இதன் காரணமாக மழை வெள்ள நீர் வீடுகளில் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டது. குறிப்பாக திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தது. பாதிக்கப்பட்ட பகுதிகள் இருந்து பொது மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்க்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான உணவு, மருத்துவம் உள்ளிட்டவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
கனமழை எதிரொலியால் வெள்ள நீர் வீடுகளில் புகுந்து மாணவர்களின் புத்தகங்கள் நீரில் மூழ்கியது. பல்வேறு இடங்களில் பள்ளிகளுக்குள் மழை நீர் புகுந்து பொருட்கள் சேதமடைந்துள்ளது. சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 9-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வு தொடங்கவுள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு
இந்நிலையில் புயல் பாதிப்பின் காரணமாக அரையாண்டு தேர்வுகள் தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உத்தரவின்படி, ஃபெஞ்சால் புயலின் (cyclone) மழை வெள்ளத்தால் கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில்கொண்டு பள்ளி மாணவர்களின் நலன்கருதி நடைபெறவுள்ள அரையாண்டுத் தேர்வுகள் இம்மாவட்டங்களில் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது.
இந்த 3 மாவட்டங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 2-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். 10,11,12-ம் வகுப்புகளுக்கு மழைநீர் வடிந்தவுடன் செய்முறைத் தேர்வு நடத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் ஏதேனும் முடிக்கப்படாமல் இருந்தால் அதனை முடித்திடவும், மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கான அறிவுரைகளை ஆசிரியர்கள் மூலமாக வழங்கிட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அரையாண்டு தேர்வு விடுமுறை
தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து டிசம்பர் 24-ம் தேதி முதல் விடுமுறை தொடங்குகிறது. தேர்வு ஒத்திவைக்கப்பட்ட 3 மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.