Close
டிசம்பர் 12, 2024 1:53 மணி

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை..!

கபிலர்மலை ஒன்றிய தொடக்ப்பள்ளி ஆசிரியர் மன்றக் கூட்டத்தில், மாநில பொருளாளர் முருகசெல்வராசன் பேசினார்.

நாமக்கல்:

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், கபிலர்மலை ஒன்றியச் செயற்குழுக் கூட்டம், பொத்தனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. ஒன்றியத்தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார்.

ஒன்றிய துணைச் செயலாளர் சந்திரகாந்தா வரவேற்றார். மாவட்ட செயலாளர் கூட்டத்தை தொடங்கி வைத்தார். மாநிலப்பொருளாளர் முருகசெல்வராசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:

மத்திய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு இணையான சம்பளம், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் 1.6.2006 முதல் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தினை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை 1.4.2003 முதல் தொடர்ந்திடல் வேண்டும்.

கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து, விடுப்பூதியம் பெறும் உரிமையை தமிழ்நாடு அரசு மீண்டும் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர், டிட்டோஜாக் உயர்மட்டக்குழுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்றுக்கொண்டுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின், 31 அம்சக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிடல் வேண்டும்.

உயிர்காக்கும் டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு பாதுகாப்புச்சட்டம் இருப்பது போல், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மகளிரணி அமைப்பாளர் செந்தாமரை நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top